Published : 03 Jun 2022 06:16 AM
Last Updated : 03 Jun 2022 06:16 AM

பி.எம். ஸ்ரீ பள்ளிகள் தொடங்கப்படும் - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

காந்தி நகர்: எதிர்கால சந்ததியினரை உருவாக்க பி.எம். ஸ்ரீ பள்ளிகள் தொடங்கப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வி அமைச்சர்களின் 2 நாட்கள் தேசிய மாநாடு குஜராத்தின் காந்தி நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டின் 2-வது நாளான நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க பள்ளிக் கல்வி அடித்தளம் அமைக்கிறது. இதை கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டிருக்கிறது. அனைத்துத் துறை மேம்பாடு, அனைவருக்கும் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட அறிவு ஆவணமாக புதிய கல்விக் கொள்கை விளங்குகிறது.

இப்போது 75-வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடி வருகிறது. அறிவார்ந்த இந்தியா, பொருளாதார வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க அடுத்த 25 ஆண்டுகள் முக்கியமானவை. 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு நாம் தயாராகும்போது​​ நமது கல்வி மற்றும் திறனை வலுப்படுத்த தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

தாய்மொழிக்கு முக்கியத்துவம்

எதிர்கால சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக தேசிய கல்விக் கொள்கையின் பள்ளிக் கல்வியில் 5 3 3 4 அணுகுமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 5 ஆண்டு அடிப்படை கல்வி (3 ஆண்டுகள் அங்கன்வாடி மற்றும் 1, 2-ம் வகுப்பு), 3 ஆண்டு முன்பருவக் கல்வி (3 முதல் 5-ம் வகுப்பு வரை) , 3 ஆண்டு இடைக்கால கல்வி (6 முதல் 8-ம் வகுப்பு வரை), 4 ஆண்டு மேல்நிலை கல்வி (9 முதல் 12-ம் வகுப்பு வரை) என்ற திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதோடு புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்த, திறமையான எதிர்கால சந்ததியினரை உருவாக்கபி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அதிநவீன பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையின் ஆய்வகமாக செயல்படும். பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை உருவாக்க அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், கல்வியாளர்களும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பேசும்போது, "நாட்டின் 34 ஆண்டு கால கல்விக் கொள்கையை மாற்றி, புதிய தேசிய கல்விக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். இதன்மூலம் அனைவருக்கும் சமமான, உயர்தரமான கல்வி கிடைக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x