

முல்லை பெரியாறு பிரச்சினை யில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு இரு மாநிலங்களுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று கேரள மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரிப்பதற்கு குடியரசுத் தலைவர் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை நடைபெற்ற கேரள சட்டமன்றக் கூட்டத்தில், தமிழக அரசுக்கு சாதகமாக வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் எழுந்துள்ள நிலைமை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் வலியுறுத் தினார்.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் சுமார் 3 மணி நேரம் விவாதம் நடத்தினர்.
அதன் இறுதியில், மத்திய அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய வேண்டும் எனக் கோரி, அவை விதிமுறை 275-ன் கீழ் முதல்வர் உம்மன் சாண்டி தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மான விவரம்
கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரள, தமிழக அரசுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்து சுமுக தீர்வு காண்பதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்.
அணையையொட்டியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் 40 லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தை விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றத்துக்கு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 143-ன் கீழ் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பரிந்துரை செய்ய வேண்டும்.
பழமையான அணை
119 ஆண்டுகள் பழமையான அணையின் பாதுகாப்பு குறித்து கேரள மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இப்பிரச்சினைக்கு புதிய அணை கட்டுவதுதான் நிரந்தர தீர்வாகும். அதன் மூலம் கேரள மக்களுக்கு பாதுகாப்பும், தமிழகத்துக்கு தண்ணீரும் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்
1979-ம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்த யோசனையின்படி கேரளமும், தமிழகமும் இணைந்து புதிய அணை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அணையில் தண்ணீரைத் தேக்கிவைக்கும் அளவை உயர்த்தினால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். வன மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களை அணைப் பகுதியில் கடுமையாக அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.