

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘நாம் இருவருமே ஆட்சி செய்யலாம்’ என்று கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும், இடது ஜனநாயக முன்னணியும் ஒப்பந்தமிட்டுக் கொண்டுள்ளன என்று பிரதமர் மோடி தாக்கிப் பேசினார்.
காசரகோட்டில் அவர் தேர்தல் பரப்புரையாற்றிய போது கூறியதாவது:
கேரளாவில் புதிய பாணி அரசியல் உருவாகியுள்ளது. அதாவது அதன் பெயர் ‘அனுசரிக்கும் அரசியல், சமரச அரசியல், ஊழல் அரசியல், ஒப்பந்த அரசியல்’ ஆகும். இதன் மூலம் இரண்டு கூட்டணிகளும் தங்களைத் தற்காத்து வருகின்றன.
ஐக்கிய ஜனநாயக முன்னணி இடது ஜனநாயக முன்னணியிடையே ஒப்பந்த அரசியல் நடைபெற்று வருகிறது. 5 ஆண்டுகளுக்கு நீ ஆட்சி செய், அடுத்த 5 ஆண்டுகள் நான் ஆட்சி செய்கிறேன் என்கிற ஒப்பந்தம்தான் இது. இதன் மூலம்தான் இருகூட்டணிகளும் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கின்றனர்.
கேரள காங்கிரஸ் தலைவர்கள் சிபிஎம் கட்சி வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது என்று குற்றம்சாட்டுவர், அப்படியே மேற்கு வங்கம் சென்றால் அங்கு கம்யூனிஸ்ட்களே மேற்கு வங்கத்தை காப்பாற்ற முடியும் என்று பல்டி அடிப்பார்கள்.
ஒரே சமயத்தில் இரட்டை நாக்குகளுடன் பேசும் கட்சிகளை படித்த கேரள மக்கள் நம்பத்தான் வேண்டுமா? இந்தத் தேர்தல் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது பற்றியல்ல, கேரளத்தை காப்பாற்றப் போவது யார் என்பது குறித்தே இந்த தேர்தல்.
வன்முறை அரசியலால் கேரளா சீரழிந்து வருகிறது.
(பாஜக தொண்டர்) ஒருவரைக் கொன்றவர்களில் ஒருவர்தான் தற்போது சிபிஎம் கட்சியின் முதல்வர் வேட்பாளர். இப்படிப்பட்டவர்கள் கையில் கேரளா பாதுகாப்பாக இருக்குமா?
அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர் ஆனால் மக்களுக்கு அதுபற்றி தெரியவில்லை. கண்ணை மூடிக்கொண்டிருப்பவர்கள் நாட்டின் இப்பகுதியில் நடைபெற்று வரும் வன்முறை அரசியல் குறித்து கவனிக்க வேண்டும், என்றார்.
மேலும் சிபிஎம் வன்முறைக்கு கால்களை இழந்த சதானந்த மாஸ்டர் என்பவரை மோடி மக்கள் முன்னிலையில் நிறுத்தினார்., பிறகு கூறும்போது, “அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. இவர் செய்த ஒரே தவறு இவரது கொள்கை அவர்களுக்குப் பிடிக்கவில்லை அவ்வளவுதான்” என்றார்.