

ஹெலிகாப்டர் ஒப்பந்க பேர ஊழல் தொடர்பாக விசாரணையை விரைவுபடுத்துமாறு வலியுறுத்துவதற்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு விரைவில் சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது.
முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக அதநவீன தொழிநுட்ப வசதிகள் கொண்ட 12 ஹெலிகாப்டர்களை வாங்க இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, 10 சதவீதம் கமிஷன் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக இத்தாலியில் தொடரப்பட்ட வழக்கில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் கைமாறியதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சிபியையும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்திருந்தது. இதில் இந்திய விமானப்படையின் முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விவரங்களை வழங்கக் கோரி பல்வேறு நாடுகளுக்கு கடிதம் (எல்ஆர்) எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக லஞ்சப் பணம் பல்வேறு நாடுகள் மூலம் கைமாறியதாகக் கூறப்படுகிறது. எனவே பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் கோரப்பட்டுள்ளது. அதன் பிறகு சுமார் 10 நாடுகளுக்கு நினைவூட்டல் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்ல அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு திட்டமிட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பயணத்தின்போது, தங்களது கோரிக்கை தொடர்பான விசாரணையை விரைவாக நடத்துமாறு அவர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளை வலியுறுத்துவார்கள் எனத் தெரிகிறது.