Published : 31 May 2022 06:06 AM
Last Updated : 31 May 2022 06:06 AM
புதுடெல்லி: உலகளவில் வலிமையான விமானப் படையைக் கொண்டுள்ள நாடுகள் பட்டியலை (2022) வேர்ல்டு டிரெக்டரி ஆப் மாடர்ன் மிலிடரி ஏர்கிராப்ட் (டபிள்யூடிஎம்எம்ஏ) வெளியிட்டுள்ளது.
இதில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 3-ம் இடம் பிடித்துள்ளது. குறிப்பாக இந்திய விமானப் படை, சீனா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ் விமானப் படைகளை பின்னுக்குத் தள்ளி உள்ளது.
டபிள்யூடிஎம்எம்ஏ, 98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47,840 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்கா 242.9 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும் ரஷ்யா 114.2 புள்ளிகளுடன் 2-ம் இடத்தையும் இந்தியா 69.4 புள்ளிகளுடன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது.
இந்திய விமானப் படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நிறுவப்பட்டது. இந்திய விமானப்படை 1950 முதல் பாகிஸ்தானுடன் 4 முறை மிகப்பெரிய போரில் ஈடுபட்டது. இந்திய விமானப்படையின் மூத்த தளபதியாக குடியரசுத்தலைவர் விளங்குகிறார்.
நிலநடுக்கம், சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களின் போது மீட்புப் பணியிலும் விமானப் படை ஈடுபடுகிறது. 1,645 போர் விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன. 1,70,576 பேர் பணிபுரிகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT