Published : 29 May 2022 05:00 AM
Last Updated : 29 May 2022 05:00 AM

8 ஆண்டில் தலைகுனிவை ஏற்படுத்தும் தவறுகள் நடக்கவில்லை - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

குஜராத்தின் அட்கோட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.படம்: பிடிஐ

காந்திநகர்: தேசத்தந்தை மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேலின் கனவுகளை மத்திய அரசு நிறைவேற்றுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டம், அட்கோட்டில் ரூ.50 கோடி செலவில் 200 படுக்கை வசதிகளுடன் மதுஸ்ரீ கே.டி.பி. உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ படேல் சேவாசமாஜ் அறக்கட்டளை நிர்வகிக்கும் இந்த மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நேரத்தில் நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கடந்த 8 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் எந்த தவறும் நடக்கவில்லை.

ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்களின் வாழ்க்கையை முன்னேற்ற தேசத்தந்தை மகாத்மா காந்தியும் சர்தார் வல்லபாய் படேலும் கனவு கண்டனர். அவர்களின் கனவுகளை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

3 கோடி குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன, 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. 9 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குக்கிராமங்களை சேர்ந்த 2.5 கோடி குடும்பங்களுக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. 6 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் 50 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இணைக்கப்பட்டுள்ளனர். ஏழைகளின் கவுரவத்தை காப்பாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்திலும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு உறுதி செய்தது. ஏழை மக்களின் ஜன்தன் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டது. அவர்களுக்கு இலவசமாக சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன, இன்றுவரை அனைவருக்கும் இலவசமாக கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

உக்ரைன் போரால் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலிலும் இந்திய மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்துள்ளோம். அரசு திட்டப் பலன்கள் 100 சதவீதம் மக்களை சென்றடைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைவருக்கும் அனைத்து பலன்களும் உரிமைகளும் கிடைக்கும்போது​பாகுபாடு மற்றும் ஊழலுக்கு இடமிருக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து தலைநகர் காந்திநகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி கூட்டுறவு நிறுவன தலைவர்களின் கருத்தரங்கில் பங்கேற்றார். அதன்பிறகு காந்திநகர் மாவட்டம் கலோலில் அமைந்துள்ள இப்கோ ஆலையில் நானோ யூரியா திரவ உற்பத்தி மையத்தை பிரதமர் திறந்துவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x