

இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் 2001-02-ம் நிதியாண்டு வருமான வரியை மறுமதிப்பீடு செய்ய வருமான வரித் துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
“அமிதாப் பச்சன் 2001-02-ல் ‘கான் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சி மூலம் சம்பாதித்த தொகைக்கு எங்களுக்கு கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது” என்று வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த 2 மேல்முறையீட்டு மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
இதனை நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.சி. பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு ஏற்றுக்கொண்டது.
மறுமதிப்பீடு செய்ய மும்பை வருமான வரி ஆணையர் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றம், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமிதாப் பச்சனுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.