Published : 28 May 2022 03:47 PM
Last Updated : 28 May 2022 03:47 PM

பிஹாரில் நெகிழ்ச்சி | ஒற்றைக் காலுடன் பள்ளி சென்ற சிறுமிக்கு செயற்கை கால் வழங்கிய கல்வித்துறை  

பிஹார் பள்ளிச் சிறுமி சீமா

பாட்னா: விபத்தில் கால் ஒன்றை இழந்த பிஹாரைச் சேர்ந்த 10 வயது பள்ளிச் சிறுமிக்கு அம்மாநில கல்வித்துறை மூலமாக செயற்கை கால் பொறுத்துப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக அமைந்துள்ளது சமூக வலைதள வைரல் வீடியோ.

பிஹார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி சீமா. இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் தனது இடது காலை இழந்திருக்கிறார். இருந்தாலும் படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், தனது கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு ஒற்றைக் காலுடன் துள்ளி துள்ளி பள்ளிக்குச் சென்று தனது படிப்பைத் தொடர்ந்துள்ளார்.

தனது கிராமத்திலிருந்து கரடுமுரடான பாதை வழியாக சீமா நொண்டியடித்தபடி பள்ளிக்கு செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்கள் வைரலானது. சீமா குறித்து செய்திகளும் வெளியாகின.

இந்த நிலையில், சத்தீஸ்கரைச் சேர்ந்த 2009-ம் பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் சரண், சிறுமி சீமா செயற்கை காலுடன் இருக்கும் படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "சோஷியல் மீடியா கீ தாக்த்" என, மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தும் சமூக வலைதளங்களின் சக்தியை பாராட்டியுள்ளார்.

அதேபோல பிஹார் மாநிலத்தின் அமைச்சர் டாக்டர் அசோக் சவுத்தி சீமாவின் வீடியோ ஒன்றை வெளியிட்டு மாநில முதல்வர் நிதிஷ் குமாரை டேக் செய்துள்ளார். அந்த பதிவில், " தங்களது மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தடைகளை உடைக்க நினைத்தது குறித்து பெருமைப்பாடுவதாகவும், சீமாவுக்கு ஏற்கெனவே உதவிகள் கிடைத்து விட்டதாகவும்" தெரிவித்துள்ளார்.

சீமாவின் வீடியோ வைரலானதைத் தெடார்ந்து ஜமுய் மாவட்ட நிர்வாகம் சீமாவிற்கு மூன்று சக்கர சைக்கிள் அளித்துள்ளது.

சீமா குறித்து கேள்விப்பட்ட நடிகர் சோனு சூட் அவருக்கு உதவ முன்வந்துள்ளார். தனது பதிவொன்றில் சோனு சூட், "சீமா இனி ஒற்றைக்கால்களில் இல்லை இரண்டு கால்களிலும் பள்ளிக்குச் செல்வாள். நான் டிக்கெட் அனுப்புகிறேன். இரண்டு கால்களில் நடந்து செல்லும் நேரம் வந்துவிட்டது" என்று கூறி தனது அறக்கட்டளையின் பெயரை டேக் செய்துள்ளார்.

இதனிடையில், சீமாவிற்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக செயற்கை கால் வழங்கப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x