Published : 28 May 2022 09:40 AM
Last Updated : 28 May 2022 09:40 AM

’2020-2021-ல் அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுகவுக்கு முதலிடம்’ - ஏடிஆர் அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: 2020-2021 காலகட்டத்தில் அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடத்தில் உள்ளது. அதேபோல் வருவாயில் 50%க்கும் மேல் செலவழித்து அதிலும் முதலிடத்தில் உள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் (Association for Democratic Reforms-ADR) அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 31 மாநிலக் கட்சிகளின் வருவாய், செலவினங்கள் பற்றிய அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.

ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் தனது வருடாந்திர வருவாய், செலவினங்கள் குறித்து தாக்கல் செய்யும் பத்திரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 54 மாநிலக் கட்சிகள் இருந்தாலும் 23 கட்சிகளின் அறிக்கை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம்பெறவில்லை. ஆகையால் எஞ்சியுள்ள 31 கட்சிகளின் தரவுகளின்படி இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய பெரிய கட்சிகளின் வருவாய், செலவு தரவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம் பெறவில்லை.

கோடி ரூபாய் கணக்கில் புள்ளிவிவரம்

வருவாய் எவ்வளவு? 31 மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.529.41 கோடி. இதில் திமுகவின் வருவாய் மட்டும் ரூ.149.95 கோடி. இரண்டாவது இடத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளது. அதன் வருவாய் ரூ.107.99 கோடி என்றளவில் உள்ளது. ஒடிசாவின் பிஜு ஜனதா தள கட்சியின் வருவாய் ரூ.73.34 கோடியாக உள்ளது.

செலவிலும் திமுக முதலிடம்: அதேவேளையில் கட்சிகளின் மொத்த செலவு ரூ.414.02 கோடியாக உள்ளது. அதில் திமுகவின் செலவு ரூ.218.49 கோடியாக உள்ளது. அதாவது வரவில் 52.77% செலவழித்துள்ளது. அதிகம் செலவு செய்த மாநிலக் கட்சிகளின் பட்டியலில் அடுத்தபடியாக ரூ.54.76 கோடியாக உள்ளது. அதிமுகவின் செலவு ரூ.42.36 கோடியாக உள்ளது.

தேர்தல் நிதி பத்திரங்கள்: தங்களின் வருவாய், செலவுக் கணக்கை முறையாக தாக்கல் செய்துள்ள மாநிலக் கட்சிகள் தேர்தல் நிதி பத்திரம் வாயிலாகவே வருவாயைப் பெற்றதாகக் கூறியுள்ளன. அதிலும் குறிப்பாக இந்த ஆய்வில் கருத்தில் கொள்ளப்பட்ட 31 கட்சிகளும் தேர்தல் நிதி பத்திரம் வாயிலாகவே ஈட்டியுள்ளதாகக் கூறியுள்ளன. 2019-2021 காலகட்டத்தில் 7 தேசியக் கட்சிகள் தங்களின் 62% வருவாய் தேர்தல் நிதி பத்திரம் வாயிலாகவே கிடைப்பதாகத் தெரிவித்துள்ளன. தேர்தல் நிதி பத்திரங்கள் என்பவை கட்சிகளுக்கு நன்கொடை வழங்க விரும்புபவர்களுக்காக வெளியிடப்படுகின்றன. இதை தனிநபரோ, நிறுவனமோ அல்லது கூட்டமைப்போ வாங்க முடியும். பாரத ஸ்டேட் வங்கி இந்தத்தேர்தல் பத்திரங்களை வழங்குகின்றன.

வெளிப்படைத்தன்மை வேண்டும்: இந்நிலையில், சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தனது அறிக்கையில், "அரசியல் கட்சிகள் தங்களின் நிதி நிலவரங்கள் பற்றிய தகவலை தாக்கல் செய்யும் போக்கில் மேம்பாடு வர வேண்டும். கட்சிகள் தரப்பில் நிதி சார்ந்த பொறுப்பும், வெளிப்படைத்தன்மையும் இருக்கின்றன என்பதை உறுதி செய்ய நிதி மூலங்கள், செலவுகள் குறித்த தகவலை தாக்கல் செய்வதில் கடுமையான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இதற்கான நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். ஒரு வரையறுக்கப்பட்ட முறையில் கட்சிகள் கணக்குகளை தாக்கல் செய்தால் தான் அரசியல் கட்சிகளின் நிதிநிலைமை குறித்த உண்மை நிலை மக்களுக்குத் தெரியவரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x