லடாக் பகுதியில் வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் நேற்று ஆற்றில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் வீரர்கள் வந்த வாகனம் உருக்குலைந்து கிடக்கிறது. விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.படம்: பிடிஐ
லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் நேற்று ஆற்றில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் வீரர்கள் வந்த வாகனம் உருக்குலைந்து கிடக்கிறது. விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.படம்: பிடிஐ
Updated on
1 min read

புதுடெல்லி: லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

லடாக் பகுதியின் பர்தாபூர் முகாமில் இருந்து ஹனீப் என்ற இடத்தில் உள்ள துணை முகாமுக்கு நேற்று காலை ராணுவ வீரர்கள் 26 பேர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். துர்துக் செக்டார் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் இருந்து விலகிச் சென்று அருகே உள்ள ஷயோக் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் இருந்த 7 வீரர்கள் உயிரிழந்தனர். மற்ற வீரர்கள் காயமடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணை நடக்கிறது

காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு பர்தாபூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலத்த காயமடைந்தவர்கள் மற்றும் உயர் சிகிச்சை தேவைப்படுவோரை மேற்கு பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்ல விமானப்படையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அது முடிந்த பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் துயர சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘லடாக்கில் நடந்த துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் நமது வீரமிக்க ராணுவ வீரர்கள் சிலர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ‘லடாக்கில் நடந்த வாகன விபத்தில் துணிச்சல் மிக்க நமது வீர்களை இழந்துள்ளோம். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான எல்லா உதவிகளும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘லடாக் வாகன விபத்தில் வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவையை நம்மால் மறக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘லடாக்கில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகி சில வீரர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் துயரமளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று கூறியுள்ளார். மேலும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in