ராஜஸ்தானில் சாகும் வரை ஏழையாக வாழ்ந்த மூதாட்டியின் வங்கி கணக்கில் ரூ. 2 கோடி வரை சேமிப்பு: அதிர்ச்சியில் உறைந்த அண்டை வீட்டார்

ராஜஸ்தானில் சாகும் வரை ஏழையாக வாழ்ந்த மூதாட்டியின் வங்கி கணக்கில் ரூ. 2 கோடி வரை சேமிப்பு: அதிர்ச்சியில் உறைந்த அண்டை வீட்டார்
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் அண்டை வீட்டாரின் உதவியுடன் அன்றாட வாழ்வை நகர்த்தி அண்மையில் உயிரிழந்த 70 வயது மூதாட்டிக்கு வங்கி கணக்கில் ரூ. 2 கோடி பணம் சேமிப்பில் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அஜ்மீரின் நுல்லா பஜாரில் உள்ள ஒரு கோயில் வளாகத்தை ஓட்டிய சிறிய அறையில் வசித்து வந்தவர் கனகலதா (70). இவரது கணவர் பிரேம் நாராயண் கடந்த ஆண்டு உயிரிழந்தார். வாரிசுகள் இல்லாமல் தனியாக வாழ்ந்த இந்த மூதாட்டிக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தான் உணவு, உடை வழங்கி காப்பாற்றி வந்துள்ளனர். சமீபத்தில் அந்த மூதாட்டி உயிரிழந்ததும், இறுதி சடங்கையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களே சொந்த பணத்தை செலவிட்டு செய்து முடித்தனர்.

இந்நிலையில் மூதாட்டியின் சொந்த பந்தங்கள் குறித்த விவரங் களை அறிய அவர் வசித்த அந்த ஒற்றை அறை வீட்டை அக்கம் பக்கத்தினர் சோதனையிட்டனர். அப்போது கட்டிலுக்கு அடியில் கிடந்த இரும்பு பெட்டியை திறந்து பார்த்தவர்கள் அப்படியே ஒரு நிமிடம் உறைந்து போயினர். பல் வேறு வங்கிகளில் வைப்பு நிதியாக போடப்பட்ட பணத்துக்கான ஆவணங்கள் அதில் இருந்தன. அந்த ஆவணங்களை ஒன்றாக கூட்டி பார்த்தபோது ரூ.2 கோடி அளவுக்கு அவர் சேமித்து வைத் திருந்தது தெரியவந்தது.

இது குறித்து பாரதி என்பவர் கூறும்போது, ‘‘அந்த மூதாட்டி எங்களிடம் எதையும் பகிர்ந்து கொண்டது இல்லை. இரு ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் நோய்வாய்பட்ட போது கூட, அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பார்த்தார். வாழும் போது பணம் இருந்த விபரத்தை யாரிடமும் அவர்கள் காட்டிக் கொண்டதில்லை’’ என்றார்.

இரும்பு பெட்டியில் இருந்து கண்டறியப்பட்ட அந்த ஆவணங்களை சம்பந்தப்பட்ட வங்கியிடம் அக்கம் பக்கத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

சத்தீஸ்கரில் மூதாட்டியின் உறவினர் ஒருவர் வசித்து வருவதாகவும், தற்போது அவர் தான் அந்த பணத்தை சொந்தம் கொண்டாட முன் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மூதாட்டி வாழும்போது ஒருவேளை உணவு கூட வழங்க முன்வராத அந்த உறவினர் தற்போது பணம் என்றதும் முன்னால் வந்து நிற்பது அக்கம் பக்கத்தினரை ஆத்திரமடைய வைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in