

இணையதள வழி அனைத்து இந்திய நகைச்சுவை குழுவைச் (ஏஐபி) சேர்ந்த நகைச்சுவை நடிகர் தன்மே பட், கடந்த மே 26-ம் தேதி முகநூலில், ‘Sachin vs Lata Civil War’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், சச்சின், லதா மங்கேஷ்கரின் அனிமேட்டட் படங்களைப் பயன்படுத்தி அவர்கள் பேசுவது போல தன்மே பேசி உள்ளார். அப்போது ‘சச்சினைவிட விராட் கோலிதான் சிறந்த வீரர்' என லதா மங்கேஷ்கர் கூறுவதுபோல பட் சொல்கிறார். அதற்கு பதிலடியாக, ‘நீங்கள் 5,000 ஆண்டு பழமையானவர்’ என லதாவைப் பார்த்து சச்சின் சொல்வது போல் பட் பேசுகிறார். இதுபோல விவாதம் தொடர்கிறது. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த வீடியோவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் அனுபம் கெர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது காமெடி கிடையாது. இது அசிங்கம், அவமானம்” என பதிவிட்டுள்ளார்.
திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினர் அசோக் பண்டிட், “நகைச்சுவை என்ற பெயரில் வெளியாகி உள்ள இந்த வீடியோ கலாச்சார தீவிரவாதம். லதா மற்றும் சச்சின் மட்டுமல்ல ஒவ்வொருவரின் சுயமரியாதையையும் பாதுகாக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் நீலம் கோரே கூறும் போது, “தேசிய அளவில் புகழ் பெற்றவர்களைக் கொச்சைப் படுத்தி சமூக ஒற்றுமையை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஏஐபி மற்றும் தன்மே பட் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
பாஜகவின் மூத்த தலைவர் (மும்பை) ஆஷிஷ் ஷெலர் கூறும் போது, “ஏஐபி மற்றும் பட் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை காவல் ஆணையரைக் கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார்.
இதுகுறித்து மும்பை மாநகர காவல் ஆணையர் தத்தா பட்சல் கிகர் கூறும்போது, “தன்மோ மீதான புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
மாநகர காவல் துறையின் சிறப்புப் பிரிவு விசாரணையை தொடங்கிவிட்டது என துணை ஆணையர் சங்கரம்சிங் நிஷாந்தர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, கடந்த 2014-ம் ஆண்டு நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் அர்ஜுன் கபூர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் கரன் ஜோஹர் ஆகியோர் பற்றி கிண்டல் செய்து ஏஐபி சர்ச்சையில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.