Published : 27 May 2022 08:46 PM
Last Updated : 27 May 2022 08:46 PM

“ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பூர்விக இந்தியர்களா?” - சீதாராமையா பேச்சால் சலசலப்பு

பெங்களூரு: கர்நாடகா மாநில 10-ம் வகுப்பு திருத்தப்பட்ட சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் கேஷவ் பலிராம் ஹெட்க்வேரின் உரை சேர்க்கப்பட்டிருப்பது குறித்து அம்மாநில முன்னாள் முதல்வர் சீதாராமையா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சீதாராமையா கலந்து கொண்டார். அப்போது அவர், 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் மேற்கொள்ளபட்ட திருத்தங்கள் குறித்து அவர் பேசும்போது, "ஆர்எஸ்எஸ்க்காரர்கள் பூர்விக இந்தியர்களா? இதைப் பற்றி நாங்கள் விவாதிக்க விரும்பவில்லை. ஆரியர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களா? அவர்கள் திராவிடர்களா? நாம் வேர்களை அடைய வேண்டும்" என்று பேசினார்.

முன்னதாக, கர்நாடக மாநிலத்தின் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் தலைவர் கேஷவ் பலிராம் ஹெட்க்வேரின் உரை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எதிப்புகளும் கிளம்பின.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடப் புத்தகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அம்மாநில கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் அளித்த விளக்கத்தில், "சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், சமூக சீர்திருத்தவாதிகள் நாராயண குரு, ஈவெரா பெரியார் அல்லது 18ஆம் நூற்றாண்டில் மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பற்றி எந்த ஒரு பாடமும் நீக்கப்படவில்லை. பாடப்புத்தகத்தில் சில திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. சந்திரசேகர ஆசாத், ராஜ்குரு, சுக்தேவ் சிங் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. சில பாடங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

பெரியார் பற்றிய பாடம் நீக்கப்படவில்லை. மாறாக, அதில் இடம் பெற்றிருந்த இந்து மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் திப்பு சில்தானுக்கு துதிபாடிய வாக்கியங்களை நீக்கியுள்ளோம். அந்த வரலாற்றின் மறுபக்கம் பற்றிய தகவல்களையும் சேர்த்துள்ளோம். நாராயண குரு பற்றிய பாடம் பத்தாம் வகுப்புக்குப் பதில் வேறு வகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.

யாருக்கும் எந்த துதியும் பாடாமல் வரலாற்றை உண்மையானதாக மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கவுள்ளோம். இதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அது பற்றி விவாதிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.

அதேபோல் ஆர்எஸ்எஸ் தலைவர் கேஷவ் பலிராம் ஹெட்க்வேரின் பேச்சை பாடப் புத்தகத்தில் சேர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம். ஹெட்கேவர் மிகப் பெரிய தேசியவாதி. ஆவர் காங்கிரஸில் இருந்து கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். கிலாஃபத் இயக்கம் தோல்வியடைந்த பின்னர் தேசத்தின் மாண்பினை தூக்கி நிறுத்த 1925-ல் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கண்டறிந்தார்.

இதற்கு முன்னாள் இருந்த பாடநூல் கழக தலைவர் பரகூர் ராமச்சந்திரப்பா பல்வேறு பாடங்களை நீக்கியிருக்கிறார். குறிப்பாக கு.வேம்புவின் கவிதைகள், காந்தி, அம்பேத்கர் பாடங்களில் சில பிரிவுகளை நீக்கி இருக்கிறார். அப்போதெல்லாம் எந்த சர்ச்சையும் எழவில்லை. ஆனால் இப்போது சிலர், அறிவுஜீவிகள் என அழைத்துக் கொள்ளும் சிலர் பாடப்புத்தகத்தில் சாதி, மதம் என பிரச்சினைகளை எழுப்பி அரசியல் செய்கின்றனர்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x