

நாடு முழுவதும் மருத்துவமனை மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக பதிவாகும் மரணங்களுக்கு மருத்துவ ரீதியாக மரணத்திற்கான காரணங்களை குறிப்பிடும் முறையில் வழக்கத்தில் உள்ளது. இதன்படி மருத்துவமனையில் பதிவாகும் மரணங்களுக்கு (MEDICAL CERTIFICATION OF CAUSE OF DEATH ) எனப்படும் மரணத்தின் காரணத்திற்கு ஏற்ப குறியீடுகள் வழங்கப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் மருத்துவ ரீதியாக சான்றிதழ் அளிக்கப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை சிஎஸ்ஆர் (Civil Registration System) சிவில் பதிவு அமைப்பின் கீழ் செயல்படும் பிறப்பு, இறப்பு பதிவு தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிடப்படும். இதன்படி, 2020-ம் ஆண்டுக்கான அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மருத்துவ ரீதியாக சான்று அளிக்கப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் அதிரித்துள்ளது.
2020-ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 80,62,070 எம்சிசிடி மரணங்கள் பதிவாகி உள்ளன. இதில் ஆண்களின் எண்ணிக்கை 48,49,373, பெண்களின் எண்ணிக்கை 32,12,444. இதில் 18,11,688 மரணங்களுக்கு மருத்துவ ரீதியாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஆண்களின் எண்ணிக்கை 11,60,119, பெண்களின் எண்ணிக்கை 6,51,569 ஆகும். இதன்படி 22.5% மரணங்களுக்கு மருத்துவ ரீதியாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சதவீதம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை உயர்ந்துள்ளது. இதன்படி 1991-ம் ஆண்டு 14.7 சதவீதம், 1992-ம் ஆண்டு 16.3 சதவீதம், 1993-ம் ஆண்டு 13 சதவீதம், 1994-ம் ஆண்டு 13.5 சதவீதம், 1995-ம் ஆண்டு 14.2 சதவீதம், 1996-ம் ஆண்டு 13.8 சதவீதம், 1997-ம் ஆண்டு 12.6 சதவீதம், 1998-ம் ஆண்டு 14.9 சதவீதம், 1999-ம் ஆண்டு 13.6 சதவீதம், 2000-ம் ஆண்டு 14.5 சதவீத மரணங்களுக்கு மருத்துவச் சான்றிதழ் பதிவாகி உள்ளன.
1991-ம் ஆண்டு தொடங்கி 2019-ம் ஆண்டு வரை மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்ட மரணங்களின் சதவீதம் 22 வரை சென்றுள்ளது. 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் 22 சதவீத மரணங்களுக்கு மருத்து ரீதியாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு இந்த சதவீதம் 22.5 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.8 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு 20.7 சதவீத மரணங்களுக்கு மருத்துவ ரீதியாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டில் சான்றிதழ் வழங்கப்பட்டவர்களில் 1 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 5.7%, 1-4 வயது வரை உள்ளவர்கள் 0.7%, 5-14 வயது வரை உள்ளவர்கள் 1.2%, 15 - 24 வயது வரை உள்ளவர்கள் 3.4%, 25-34 வயது வரை உள்ளவர்கள் 5.4%, 35 - 44 வயது வரை உள்ளவர்கள் 8.4%, 45 - 54 வயது வரை உள்ளவர்கள் 14.1%, 55 - 64 வயது வரை உள்ளவர்கள் 19.1%, 65-69 வயது வரை உள்ளவர்கள் 11.6%, 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 28.6% ஆகும்.
இந்தியாவில் அதிக அளவு மருத்து ரீதியாக சான்றிதழ் வழங்கப்பட்ட மாநிலங்களில் கோவா முதல் இடத்தில் உள்ளது. கோவா மாநிலத்தில் பதிவான அனைத்து மரணங்களுக்கும் மருத்துவ ரீதியான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழகம் 11-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பதிவான 6,87,212 மொத்த மரணங்களில் 2,95,539 மரணங்களுக்கு மருத்துவ ரீதியாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களை பொறுத்தவரையில் தமிழகத்தில்தான் அதிக அளவு மருத்து ரீதியான சான்றிழ் வழங்கப்பட்டள்ளது.