Published : 27 May 2022 05:33 AM
Last Updated : 27 May 2022 05:33 AM
மும்பை: நில மோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா போக்குவரத்து அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
மகாராஷ்டிரா மாநில கூட்டணி அரசில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அனில் பராப் போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார். 2017-ம் ஆண்டு அனில் பராப் ரத்தினகிரி மாவட்டத்தை அடுத்த டபோலி பகுதியில் நிலம் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 1 கோடியே 10 லட்சம் ஆகும். எனினும், இந்த நிலத்தை 2019-ம் ஆண்டில்தான் அவர் பதிவு செய்துள்ளார். 2017 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் அந்த நிலத்தில் தங்கும் விடுதி கட்டப்பட்ட நிலையில், 2020-ம் ஆண்டு அந்த நிலம் மும்பையை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் சதானந்த் கதம் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், அமைச்சர் அனில் பராப்புக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அமைச்சர் பராப்புக்கு சொந்தமான மும்பை வீடு மற்றும் டபோலி, புனே ஆகிய இடங்களில் மொத்தம் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT