

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பள்ளி முதல்வர் ஒருவர் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக புகார் அளித்துள்ளார். அதற்கான ஆதாரத்தை அவர் சமர்ப்பித்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் நபர் ஒருவர், பெண் ஒருவரால் கடுமையாக தாக்கப்படும் காட்சி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்த நிலையில், அந்த வீடியோவில் இருப்பவர் அஜித் யாதவ என்பதும், அவருடைய மனைவியால் அவர் பேட், வீட்டு உபயோகப் பொருட்களால் தாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
கடந்த ஒரு வருடமாக தனது மனைவி சுமன் யாதவ்வின் தாக்குதல் அதிகமானதைத் தொடர்ந்து வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்கிறார் அஜித் யாதவ். இதனைத் தொடர்ந்து அஜித் யாதவ் தன் மனைவியால் தாக்குதலுக்கு உள்ளாகி வருவது குறித்து போலீஸில் சிசிடிவி ஆதாரத்துடன் புகாரும் அளித்துள்ளார். அந்த வீடியோ பதிவில், அஜித் யாதவ் தன் மனைவியால் அடி வாங்குவதும், அப்போது அவர்களது சிறு வயது மகன் பயந்து ஒதுங்குவதும் பதிவாகியுள்ளது.
பள்ளி முதல்வரான அஜித் யாதவ் கூறும்போது, “எங்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் காதலித்தே திருமணம் செய்து கொண்டோம், சுமனை நான் அடித்ததே இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி தற்போது அஜித் யாதவுக்கு போதிய பாதுகாப்பை போலீஸார் வழங்கியுள்ளனர்.