Published : 26 May 2022 06:07 AM
Last Updated : 26 May 2022 06:07 AM

'நாடாளுமன்றத்தில் சுயேச்சை குரல் ஒலிக்க வேண்டியது அவசியம்' - காங்கிரஸில் இருந்து விலகினார் கபில் சிபல்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய கபில் சிபல் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். உடன் மனைவி பிரமிளா சிபல், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்.படம்: பிடிஐ

லக்னோ: காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் (73) அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். மேலும் சமாஜ்வாதி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் (2004 – 2014) பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். 2016-ம் ஆண்டு முதல் உ.பி. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவரது பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய இருந்தது. இதனிடையே, காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்த 23 அதிருப்தி தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் விரைவில் காலியாக உள்ள 11 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. இந்த சூழலில் லக்னோவில் உள்ள உத்தரபிரதேச சட்டப்பேரவை வளாகத்துக்கு கபில் சிபல் நேற்று சென்றார். அங்கு சமாஜ்வாதி கட்சித் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் முன்னிலையில், மாநிலங்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கபில் சிபல் தாக்கல் செய்தார். அவருக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவளிக்கும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து கபில் சிபல் லக்னோவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன். என்னுடைய ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமைக்கு கடந்த 16-ம் தேதியே அனுப்பிவிட்டேன். மாநிலங்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடு வதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன். சமாஜ்வாதி கட்சி எனக்கு ஆதரவளிக்கும். நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினரின் குரல் ஒலிக்க வேண்டியது அவசியம். சுயேச்சை உறுப்பினரின் குரல் ஒலித்தால் அவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர் என மக்கள் நம்புவர்” என்றார்.

அகிலேஷ் நம்பிக்கை

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, “வேலையின்மை அதிகரிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, எல்லையில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து கபில் சிபல் தனது கருத்துகளையும் சமாஜ்வாதி கட்சியின் கருத்துகளையும் நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பார் என நம்புகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x