Last Updated : 08 May, 2016 04:26 PM

 

Published : 08 May 2016 04:26 PM
Last Updated : 08 May 2016 04:26 PM

பசு இறைச்சி வைத்திருந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை: குஜராத் கோர்ட் அதிரடி

குஜராத் மாநிலத்தில் தடையை மீறி பசுமாட்டிறைச்சி வைத்திருந்தவருக்கு உள்ளூர் கோர்ட் ஒன்று 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

குஜராத் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருப்பது, விற்பனை செய்வது, ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சூரத் மாவட்டத்தின் தேவதா கிராமத்தைச் சேர்ந்த ரபீக் இலியாஸ்பாய் கலீபா என்ற நபரை போலீஸார் மாட்டிறைச்சி குற்றத்துக்காகக் கைது செய்தனர். அதாவது பசுவதைத் தடுப்புக் குழு உறுப்பினர்கள் சிலர் ரஃபீக் 20 கிலோ மாட்டிறைச்சியை தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் போது வழிமறித்துப் பிடித்ததை அடுத்து போலீஸ் ரஃபீக்கை கைது செய்தது. இந்த மாட்டிறைச்சி சுமார் ரூ.4,000 பெறுமானமானது.

காந்தேவி போலீஸ் சரகம் உடனே இறைச்சியை சோதனைச் சாலைக்கு அனுப்பி சோதித்ததில் இது பசு இறைச்சி என்பது ஊர்ஜிதமானது. இதனையடுத்து பல்வேறு வழக்குகளை ரஃபீக் கலிஃபா மீது பதிவு செய்தது.

இந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஞாயிறன்று காங்தேவி ஜுடிஷியல் மேஜிஸ்ட்ரேட் சி.ஒய்.வியாஸ் வெளியிட்ட போது, 35 வயதாகும் ரபீக் இலியாஸ்பாய் கலீஃபாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில் அவர் கூறும்போது, “பசு என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களின் மத உணர்வாகும். எனவே இத்தகைய குற்றங்கள் சமூகத்தின் அமைதியைக் குலைப்பது. எனவே இவருக்குச் சிறைத் தண்டனை அளிப்பது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்” என்றார்.

ரபீக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரபீக் கலீஃபா ஒரு ஏழை. அவரை நம்பி குடும்பம் இருக்கிறது எனவே அவர் தண்டனையின் கடுமையைக் குறைக்க வேண்டும் என்று மன்றாடினார்.

ஆனால் நீதிபதியோ, “குற்றம்சாட்டப்பட்டவர் ஏழை என்பதனாலோ அவரை நம்பி குடும்பம் இருக்கிறது என்பதற்காகவோ தண்டனையை குறைப்பது நியாயமாகாது” என்றார்.

இதே போன்ற மற்றொரு வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்று யூசுப் பாய் மம்னியாத் என்பவர் விடுவிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x