திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம்
Updated on
1 min read

புதுடெல்லி: கோ - லொக்கேஷன் வழக்கில் தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை கடந்த மார்ச் மாதம் சிபிஐ கைது செய்தது. அதையெடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவ்வழக்குத் தொடர்பாக, அவரிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

பங்குச் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் கோ-லொக்கேஷன் வசதியை என்எஸ்இ 2010-ல் அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த வசதியை முறைகேடாகப் பயன்படுத்தி குறிப்பிட்ட சில பங்குச் சந்தை புரோக்கிங் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக என்எஸ்இ மீது 2015-ல் குற்றம் சாட்டப்பட்டது.

அதுதொடர்பான விசாரணையின்போது, 2013 முதல் 2016 வரையில் என்எஸ்இயின் சிஇஓ-வாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை யோகி ஒருவரின் ஆலோசனையின்படியே நிறுவனம் தொடர்பான அனைத்து நிர்வாக முடிவுகளையும் எடுத்து வந்திருக்கிறார் என்பது தெரியவந்தது. அந்த யோகியின் அறிவுறுத்தலின்படியே, பங்குச் சந்தை நிர்வாகம் தொடர்பாக முன்அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை அதிக ஊதியத்துக்கு சித்ரா ராமகிருஷ்ணா பணிக்கு அமர்த்தினார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆனந்த் சுப்ரமணியனையும், மார்ச் முதல் வாரத்தில் சித்ரா ராமகிருஷ்ணாவையும் சிபிஐ கைது செய்தது. கடந்த மாதம் இருவர் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் சிபிஐயும் அமலாக்கத்துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in