Last Updated : 25 May, 2022 06:00 AM

 

Published : 25 May 2022 06:00 AM
Last Updated : 25 May 2022 06:00 AM

அவுரங்கசீப் செய்தார் என்பதற்காக அரசும் அதை செய்யுமா? - ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பேராசிரியர் இர்பான் ஹபீப் கேள்வி

புதுடெல்லி: காசி, மதுராவின் கோயில்களை அவுரங்கசீப் இடித்தார் என்பதற்காக இப்போதைய அரசும் அதை செய்யுமா? என வரலாற்றுப் பேராசிரியர் இர்பான் ஹபீப் (90) கேள்வி எழுப்பியுள்ளார்.

முகலாயர் வரலாற்று ஆய்வில்தன் சர்வதேச புகழால் பத்மபூஷனும் பெற்றவர் இர்பான் ஹபீப். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் மூப்பு நிலைப் பேராசிரியராக உள்ளார். மத நம்பிக்கையற்ற இடதுசாரி சிந்தனையாளரான அவர் ‘இந்துதமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி வருமாறு:

முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் சிவன் கோயில் இடிக்கப்பட்டு கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுவது உண்மையா?

அவுரங்கசீப் தன் ஆட்சியில் கோயில்களை உடைத்தது உண்மைதான். இதுபோன்ற நடவடிக்கைகள் ஒளிவுமறைவுடன் செய்யப்படவில்லை என்பதற்கான வரலாற்று ஆதாரங்களாக அவரது அரசு குறிப்புகளான ‘ஆலம்கீர்நாமா’வில் உள்ளன. ஆனால், வாரணாசியில் உடைக்கப்பட்டது சிவன் கோயில்தான் என்பது உறுதியில்லை. அங்கு சிவலிங்கம் கிடைத்ததாகக் கூறி சிவன் கோயில் எனப்படுகிறது. இல்லையெனில், வேறு கடவுள்களின் கோயிலாகவும் அது இருக்கலாம். எனினும், அங்குள்ள கியான்வாபி மசூதியை அவுரங்கசீப் தான் கட்டினாரா? என்றும் தெரியவில்லை.

இப்போது மீண்டும் கோயில் கட்டுவதற்காக கியான்வாபியை இடிக்க வேண்டும் எனக் கூறப்படுவதில் உங்கள் கருத்து?

அக்காலங்களில் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் மசூதிகளில் புத்த விஹாரங்களின் சிற்பங்களும், கற்களும் கிடைக்கின்றன. இதற்காக அவை மீண்டும் உடைக்கப்பட வேண்டுமா? இது ஒரு அறிவின்மைக்கானச் செயல். வாரணாசியிலும், மதுராவில் வீர் சிங் புந்தேலா கட்டிய கேசவ் ராயின் மிகப்பெரிய கோயிலையும் அவுரங்கசீப் இடித்தது உண்மையே. கி.பி.1670-ல் அவுரங்கசீப் இடித்தார் என்பதற்காக இன்றைய அரசும் அதை செய்ய வேண்டுமா? இதுபோன்ற செயல், இந்திய தொல்பொருள் வரலாற்று சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் 1958- க்கு எதிரானது. இதன்படி, அவற்றை பாதுகாக்க வேண்டுமே தவிர உடைக்கக் கூடாது.

மதுராவிலுள்ள கிருஷ்ண ஜென்மபூமி கோயிலையும் இடித்து மசூதி கட்டப்பட்டதாக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதே?

மதுராவின் கேசவ் தேவ் எனும் பெயரிலான கோயிலானது ஜஹாங்கீர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ஆனால், வாரணாசியின் கோயில் எவ்வளவு பழமையானது என்பது எனக்கு தெரியாது. இதைப்போல், மதுராவின் ஷாயி ஈத்கா மசூதியும் முகலாயர் காலத்தில் கட்டப்பட்டது தான். இது, கோயிலை இடித்துக் கட்டப்பட்டதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை.

இதுபோல், முகலாயர் கால மசூதிகள் தற்போது இடிக்கப்பட வேண்டும் எனப் புகார்கள் எழுவதற்கு காரணம் என்ன?

இதுபோன்ற புகார்களுக்கு 1992-ல் பாபர் மசூதி உடைக்கப்பட்டது காரணமாகிவிட்டது. அங்கு கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதித்து புதிய கோயிலுக்கானப் பாதை சீரானாது. இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை புறந்தள்ளி, கோயில் கட்ட அனுமதிப்பதற்காகக் (நம்பிக்கையின் அடிப்படையில்) கூறப்பட்ட காரணம் எவரும் எதிர்பார்க்காதது.

கியான்வாபியின் ஒசுகானாவில் கிடைத்தது சிவலிங்கம் என இந்துக்களும், இதை முஸ்லீம்கள் மறுப்பதிலும் இருக்கும் உண்மை என்னவாக இருக்கும்?

கியான்வாபியின் ஒசுகானாவில் கிடைப்பது எதுவாக இருந்தாலும் சிவலிங்கம் ஆகிவிடுமா? முன்பு வாரணாசியின் கியான்வாபி வழக்கில் தாக்கல் செய்த மனுவில் சிவலிங்கத்தை பற்றி எந்த குறிப்பும் இல்லை. இப்போது கிடைத்ததை சிவலிங்கம் என்கின்றனர். அப்போது, வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படும்போது இருந்த வழக்கம் காரணமாக மசூதியில் கோயிலுக்கான சின்னங்கள் மற்றும் கற்கள் கிடைக்கின்றன. இதனால் என்ன பிரச்சனை எழுந்துவிடப் போகிறது?

அக்காலங்களின் கோயில்களும் மற்ற மதங்களின் வழிபாட்டுத்தலங்களை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறதே?

இதேபோல், நாட்டின் கோயில்களில் தேடினால் அதன் பலவற்றில் புத்த விஹாரங்கள் கிடைத்து விடும். இவை புத்த மதத்தின் விஹாரங்களாக இருந்திருக்கலாம். எனவே, ஏற்கெனவே இருந்த வழிபாட்டுத்தலங்களை இடித்துக் கட்டுவது என்றால் நாட்டின் பல முக்கிய இந்து கோயில்களையும் உடைக்க வேண்டி வரும். ராஜஸ்தானின் ராணா பிரதாப் சிங்கின் சித்தோரிலுள்ள கோட்டையில் பழங்கால ஒருமினார் உள்ளது. அதன் கீழ் பகுதியில் தேவதைகளும், மேல்பகுதியில், ‘அல்லா! அல்லா!’ என அரபி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்காக அது மசூதியாகிவிடுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x