

நாட்டில் மண்ணெண்ணெய் பயன் பாடு இல்லாத முதல் நகரமாக டெல்லி உதயமாகியுள்ளதாக அம்மாநில அரசு செவ்வாய்க் கிழமை அறிவித்தது.
“டெல்லி மண்ணெண்ணெய் பயன்பாடில்லா நகரம் 2012 என்ற திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதன் மூலம் இது சாத்தியமானது. டெல்லியில் மானிய விலை மண்ணெண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி மிச்சமாகும்” என்று டெல்லி உணவுப் பொருள் விநியோகத் துறை ஆணையர் எஸ்.எஸ். யாதவ் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இத்திட்டம் 3 எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச் சகத்தின் உதவியுடன் 2012-ல் தொடங்கப்பட்டது. இதில் டெல்லி மாநில அரசுக்கு ரூ. 62 கோடி செலவானது.
டெல்லி இதற்குமுன், மத்திய அரசிடமிருந்து ஆண்டு தோறும் 53 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் பெற்று வந்தது. தகுதியுள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு மானிய விலையில் வினியோகித்ததன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி செலவானது.
இத்திட்டத்தின் கீழ் மண்ணெண் ணெய் பெறும் குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் காஸ் சிலிண்டர்களுடன் இலவச எரி வாயு இணைப்பு, காஸ் ஸ்டவ், ரெகுலேட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
3.56 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றிருக்க வேண்டும். ஆனால் 2,14,149 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். ஏற்கெனவே காஸ் இணைப்பு உள்ள வர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என்பதால் அவர்களும், இடம் மாறிச் செல்பவர்களும் விண்ணப்பிக்கவில்லை.
பின்னர் ஆய்வில், 20,732 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு எஞ்சியவர்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப் பட்டது.
மண்ணெண்ணெய் எரிப்பதால் நச்சுப் புகை வெளியேறி காற்று மாசுபடுவது, இத்திட்டத்தால் நின்றுள்ளது. மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடிப்பதால் ஏற்படும் விபத்துகளும் தவிர்க்கப்பட்டு, மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டுள்ளது.
டெல்லியில் மண்ணெண்ணெய் விற்பனை தடை செய்யப்பட் டுள்ளது. இதை மீறுவோர் மீது அத்தியாவசிப் பொருள்கள் சட்டம் - 1955, டெல்லி மண்ணெண்ணெய் கட்டுப்பாடு உத்தரவு 1962-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எஸ்.எஸ்.யாதவ் கூறினார்.