Published : 25 May 2022 01:36 AM
Last Updated : 25 May 2022 01:36 AM

அனைத்து பிரச்சினைகளுக்கும் சர்வதேச சட்டங்கள் மூலம் தீர்வு - குவாட் தலைவர்கள் கூட்டறிக்கை

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி

டோக்கியோ: உக்ரைனில் நடந்து வரும் மோதல், நிலவிவரும் துயர்மிகு மனிதாபிமான நெருக்கடிகள் குறித்த எங்களின் பொறுப்புகளை பற்றி விவாதித்தோம். இதன் தாக்கத்தால் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாங்கள் மதிப்பீடு செய்தோம். இந்த பிராந்தியங்களில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணுவதற்கு குவாட் தலைவர்கள் மீண்டும் உறுதியளிக்கிறோம். அனைத்து நாடுகளின் இறையாண்மை, பிரந்திய ஒருமைப்பாடு, ஐநா சாசனத்தை மதிப்பதே சர்வதேச ஒழுங்கிற்கான மையப்புள்ளி என்பதை நாங்கள் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சுட்டிக்காட்டியுள்ளோம். அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டங்களின் மூலமாக அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டுக்கான குவாட் நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து பிரமர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுதந்திரமான, வெளிப்படையான இந்தியா - பசிஃபிக் பிராந்தியத்திற்கு நமது உறுதியை புதுப்பிக்க ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய நாம் இன்று டோக்கியோவில் கூடியிருக்கிறோம்.

கோவிட் -19 பொருந்தொற்று உலகைச் சுற்றி இன்னமும் மனிதர்கள் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் நிலையிலும், அரசுகளிடையே எதேச்சையான போக்குகள் உள்ள போதும், உக்ரைனில் சோகமான மோதல் உள்ளபோதும், நாம் உறுதியுடன் இருக்கிறோம்.

அமைதியும் நிலைத்தன்மையும்: அனைத்து வடிவங்களிலுமான பயங்கரவாதம் மற்றும் வன்முறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எந்த வகையிலும் பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்த முடியாது என்பதை வலியுறுத்துகிறோம். உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான எங்களின் போராட்டத்தை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

கோவிட்-19 மற்றும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு: இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கோவிட்-19-ன் தாக்கங்கள் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. நமது சமூகங்கள், குடிமக்கள், சுகாதாரப்பணியாளர்கள், பொருளாதாரம் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார பாதுகாப்புக்கு சிறந்த கட்டமைப்பை உருவாக்குதல், சுகாதார நடைமுறைகளை வலுப்படுத்துதல் என்ற பார்வையுடன் கோவிட்-19 எதிர்கொள்ள குவாட் அமைப்பின் நாடுகள் உலகளாவிய முயற்சிகளுக்கு தலைமையேற்பதை தொடரும்.

அடிப்படை கட்டமைப்பு: இந்தியா - பசிஃபிக் பிராந்தியத்தில் உற்பத்தி திறனையும் வளத்தையும் அதிகரிப்பதற்கு முக்கியமான அடிப்படை கட்டமைப்புக்கு ஆழ்ந்த ஒத்துழைப்பை வழங்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். பல நாடுகளில் பெருந்தொற்றால் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் கடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் நாங்கள் உறுதி ஏற்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த பிராந்தியத்தில் அடிப்படை கட்டமைப்புக்கான உதவி மற்றும் முதலீட்டுக்கு 50 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக குவாட் கோர உள்ளது.

கால நிலை: “தணிப்பு” மற்றும் “ஏற்பு” என்பதை இரண்டு மையப் பொருள்களாக கொண்டு இன்று நாங்கள் “குவாட் காலநிலை மாற்ற ஏற்பு மற்றும் தணிப்பு திட்டத்தை” தொடங்கியுள்ளோம். 2050-க்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தை முற்றிலுமாக நீக்குவதற்கு சட்டம் இயற்றியது உள்பட காலநிலை மாற்றம் குறித்த புதிய ஆஸ்திரேலிய அரசின் வலுவான செயல் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

குவாட் ஃபெலோஷிப்: மக்களுடன் மக்கள் உறவுகளை அங்கீகரிக்கும் விதமாக அதிகாரப்பூர்வ குவாட் ஃபெலோஷிப் அறிவிக்கப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு விண்ணப்பம் செய்வது தற்போது தொடங்கியுள்ளது. குவாட் நாடுகளிலிருந்து 100 மாணவர்கள் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x