Published : 24 May 2022 02:10 PM
Last Updated : 24 May 2022 02:10 PM

பிரசாந்த் கிஷோருக்கு பதில் சுனில்: 2024 தேர்தலுக்கு தயாராக காங்கிரஸில் குழுக்கள் அறிவிப்பு

புதுடெல்லி: 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையாக புதிய குழுக்களை கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையாத நிலையில் அவரது ஐபேக் நிறுவனத்தில் அவருக்கு கீழ் பணியாற்றிய சுனில் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்.

மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டே காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை. அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையக்கூடும் என மீண்டும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி தீவிர ஆலோசனை நடத்தினார். ஆனால் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தெலங்கானா ராஷ்ட்ர சமதி கட்சிக்கு தேர்தல் பணியாற்ற திடீர் என ஒப்பந்தம் செய்தது. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியில் புயலை கிளப்பியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார்.

ஜன் ஸ்வராஜ் (நல்லாட்சி) என்ற பெயரில் இயக்கம் தொடங்கப் போவதாகவும், பிஹாரில் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செய்து பொதுமக்களை சந்திக்க உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோரிடம் பணியாற்றிய சுனில்

இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணையாவிட்டாலும் அவர் அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்க அடுத்தடுத்து கூட்டங்கள் நடந்தன. காங்கிரஸ் கட்சியின் மாநாடு, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட அகில இந்திய செயற்குழுத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் என்று பலரும் கலந்துகொண்டனர். இதில் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸை மறு சீரமைப்பு செய்ய பிரசாந்த கிஷோர் பரிந்துரை அளித்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்து கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அரசியல் விவகாரக் குழு, பணிக்குழு 2024 மற்றும் மத்திய திட்டமிடல் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. நாடுதழுவிய அளவில் காங்கிரஸில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சோனியா காந்தி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் விவகாரக் குழுவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, திக்விஜய சிங், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால் மற்றும் ஜிதேந்திர சிங் ஆகிய 8 முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ப.சிதம்பரம், ஜோதிமணி

பணிக்குழு 2024-ல் சிதம்பரம், பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கன் மற்றும் சுனில் கனுகோலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் சுனில் கனுகோலு பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார். அதன் பிறகு தனியாக பிரிந்து தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

மத்திய திட்டமிடல் குழுவில் திக்விஜய சிங், சச்சின் பைலட், மக்களவை எம்.பி.க்கள் சசி தரூர், ரவ்னீத் சிங் பிட்டு, ஜோதி மணி, பிரத்யுத் போர்டோலோய், கே.ஜே. ஜார்ஜ், ஜிது பட்வாரி மற்றும் சலீம் அகமது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி ஜோடோ யாத்ரா என்ற பெயரில் அக்டோபரில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேரணி நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பிரச்சார யாத்திரை

இந்த யாத்திரையில் மத்திய அரசின் கொள்கைகளால் அரசியலமைப்பின் மீதான தாக்குதல், மதச்சார்பின்மை மீதான தாக்குதல் மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் லாபம் ஈட்டுதல் போன்றவை ஏற்படுவதை முன்வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய இந்த யாத்திரை நடைபெறுகிறது. இதற்காக ஒத்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகள், குழுக்கள், சமூக குழுக்களை ஒருங்கிணைத்து இந்த யாத்திரையை நடத்தவும் முடிவு செய்துள்ளது. இதற்காக 13 மாநிலங்களில் 3,500 கிலோ மீ்ட்டர் தூரம் இந்த யாத்திரை பயணிக்கும்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x