டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா - யார் இவர்?

டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா - யார் இவர்?
Updated on
1 min read

டெல்லி: புதுடெல்லியின் துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.

வினய் குமார் நியமனத்தை முறைப்படி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அறிவித்தார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வினய் குமார், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக 2015 முதல் பணியாற்றி வந்துள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடும் மத்திய அரசின் தேசியக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.

பத்ம விருதுகள் தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த அனுபவமும் இவருக்கு உண்டு. 2016 முதல் 2020 வரை, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் பிரதமர் விருதுகள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். புதுடெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் உறுப்பினராக, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) - இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் பயோரிசோர்ஸ் டெக்னாலஜியின் ஆராய்ச்சி கவுன்சிலின் உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ள வினய் குமார் சக்சேனாவை நேற்று புதிய ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவிட்டார்.

ஆளுநர் மாற்றம் ஏன்?

புதுடெல்லியின் துணைநிலை ஆளுநராக கடந்த 2016-ம் ஆண்டில், அனில் பைஜால் பதவி ஏற்றார். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மத்திய உள்துறை செயலாளராகவும் இவர் பணியாற்றினார். இதர அமைச்சகங்களிலும், இவர் முக்கிய பொறுப்பில் இருந்தார்.

பல விஷயங்களில், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும், முதல்வர் கேஜ்ரிவாலுக்கும் இடையே அதிகார மோதல் இருந்துவந்தது. அரசியலமைப்பு சட்டப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இல்லை, உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் உள்ளது என உச்ச நீதிமன்றம் தெளிவுபட கூறியது டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது.

இந்நிலையில் தான் கடந்த வாரம், அனில் பைஜால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டு இருந்தார். அனில் பைஜாலுக்குப் பதிலாகவே தற்போது மற்றொரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வினய் குமார் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in