Last Updated : 05 May, 2016 08:22 AM

 

Published : 05 May 2016 08:22 AM
Last Updated : 05 May 2016 08:22 AM

இந்த ஆண்டின் 4 மாதங்களில் 20,000 காட்டுத் தீ சம்பவங்கள்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 20 ஆயிரம் காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

நாடாளுமன்ற மாநிலங்கள வையில் நேற்று முன்தினம் உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேச காட்டுத் தீ குறித்து பிரச்சினை எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து கூறியதாவது:

உத்தராகண்ட் மாநிலத்தை பொறுத்தவரை இந்த ஆண்டில் 291 முறை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் 2,422, ஒடிசாவில் 2,349 மத்தியப் பிரதேசத்தில் 2,238, மகாராஷ்டிராவில் 1,638 என இந்த ஆண்டின் நான்கு மாதங்களில் மட்டும் (ஏப்ரல் 21 வரை) 20,667 காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கடந்த 2015-ல் இதே காலக்கட்டத்தில் 15,937 முறை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதே போல் அசாம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த ஆண்டு அதிக அளவில் காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

எதிர்பாராமல் நடக்கும் இந்த காட்டுத் தீ சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில மற்றும் உள்ளூர் மட்டத்தில் நெருக்கடி குழுக்களை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் வன மேலாண்மை திட்டத்தின் கீழ் காட்டுத் தீயால் பாதிக்கப்படும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி மூலம் கண்காணிப்பு கோபுரங்கள், தீ கண்காணிப்பு குழுக்கள், வன மேலாண்மை குழுக்களுக்கு தேவையான கூட்டு உதவி அமைப்புகள் ஆகியவை உருவாக்கப்படும். தவிர தண் ணீர் தேக்க கட்டுமானங்கள் கட்டு வதற்கும், தீயணைப்புக்கான உபகரணங்கள் வாங்கு வதற்கும் இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும். தீயணைப்பு மேலாண்மை திட்ட தயாரிப்பு மற்றும் பயிற்சிகளும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் காட்டுத் தீயை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் வரும் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு இரு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x