Published : 23 May 2022 05:06 PM
Last Updated : 23 May 2022 05:06 PM

உதய்பூர் மாநாடும் காங்கிரஸ் கணக்கும்: பலிக்குமா சோனியா வியூகம்?

காங்கிரஸ் கட்சியின் மாநாடு, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நேரு குடும்பத்தின் தலைமையிலேயே காங்கிரஸ் தொடர வேண்டுமா, இல்லை அதற்கு வெளியே புதிதாக ஒரு தலைவர் உருவாகி வர வேண்டுமா என்ற கேள்விகளுக்கு இடையேதான் இந்த மாநாடு கூடியது.

அவல நிலைக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ் கட்சி, புதுவடிவம் எடுத்தாக வேண்டும் என்ற திடீர் முனைப்போடு செயல்படுவதற்கு இப்போதுதான் திட்டம் தீட்டுகிறது. உதய்பூர் மாநாடு அந்தத் திசைவழியில் பயணிக்க முடிவு செய்திருப்பதாகத்தான் தெரிகிறது. உத்தரப் பிரதேசம் உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தோற்றவுடன் துரிதமாக சோனியா காந்தி களத்தில் இறங்கியிருப்பதுபோல் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியின் உதய்பூர் மாநாடு எதையாவது நாட்டு மக்களுக்குத் தெரிவித்தது என்றால், அது ‘நாங்கள் வீழ்ந்திருக்கிறோம். ஆனால் எழுந்து வருவோம்’ என்ற செய்தியைத்தான்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மிகுந்த உத்வேகத்துடன் மாநாட்டுத் தொடக்கவுரையை ஆற்றியிருக்கிறார். அவரது தொனி, பாஜக அரசை நேரடியாக எதிர்கொள்வது என்பதாகத்தான் தெரிகிறது. அங்கு கூடியிருந்த மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஒரு செய்தி கிடைத்தது. சோனியா காந்தி மிகத் தெளிவாகவும் ஆக்ரோஷத்துடனும் இருக்கிறார் என்பதும், நாம் வழக்கம்போல் பானையை உருட்டிக்கொண்டிருக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும். ‘செய் அல்லது செத்து மடி’ என்பதை அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார்.

உதய்பூர் மாநாட்டை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று, பாஜக அரசின் நடவடிக்கைகள் மீதான விமர்சனம். இரண்டு, காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரத் தீர்மானங்கள். மூன்று, கட்சியின் ஸ்தாபனத்தில் செய்யவிருக்கும் பெரிய மாற்றங்கள். பாஜக அரசு மீதான விமர்சனங்கள் புதிதல்ல. ஆனால், அதன் கடுமை புதிது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மிருகத்தனமானது என்று சோனியா காந்தி வர்ணித்திருக்கிறார். பாஜக அரசு நாட்டை முற்றாகப் பிளவுபடுத்திவிட்டது என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். காங்கிரஸில் சிறு பகுதியினர் மென்மையான இந்துத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். சோனியாவின் பேச்சு அவர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டது. கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில் மதவாதிகளிடம், சாதிய, சமூக சக்திகளிடம் ஒரு இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதிலிருந்து மதவாதக் குழுக்கள் மட்டும் நீக்கப்பட்டுவிட்டன.

கட்சி ஸ்தாபனத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்றும் எதிர்பார்க்கலாம். ஒரு குடும்பம், ஒரு பதவி, எல்லா மட்டங்களிலும் 50 வயதுக்குக் கீழானவர்களுக்கு 50% ஒதுக்கீடு போன்ற பல சீர்திருத்தங்களை காங்கிரஸ் மாநாடு கொண்டுவந்திருக்கிறது. இவை நல்ல முயற்சிகளே. ‘மக்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் சேர்ந்திருங்கள்’ என்றும் ‘நாட்டு மக்கள் படும் துயரங்களுக்கு வீதியில் இறங்கிப் போராடுங்கள்’ என்றும் காங்கிரஸ் அறைகூவல் விடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் குறிப்பிடத்தக்க மனமாற்றம் நிகழ்வதற்கு உதய்பூர் மாநாடு காரணமாக இருந்திருக்கிறது. ஆனால், இதைத் தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் உண்மையாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிதிரள மாட்டார்கள்.

> இது, கு.பாஸ்கர் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x