

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று சீனா சென்றடைந்தார்.
சீனாவின் தொழில் நகரமான குவாங்ஷுவில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் பிரணாப் முகர்ஜி, அங்கு நடக்கும் இந்திய சீன வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதில் இந்திய தொழிலதிபர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.
பின்னர் வியாழக்கிழமை தலைநகர் பீஜிங் செல்லும் பிரணாப், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லீ கெகியாங் உட்பட அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும் அணுசக்தி விநியோக கூட் டமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஐ.நா. மூலம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைவர் மசூத் அசாருக்கு தடை விதிப்பதற்கு முட்டுக்கட்டை போடுவது ஏன்? உள்ளிட்ட விவகாரங்களை பிரணாப் எழுப்பவுள்ளார்.
இதைத் தொடர்ந்து சீனாவின் பெக்கிங் பல்கலைக்கழகத்திலும் பிரணாப் உரையாற்றுகிறார். அப்போது இந்திய சீன பல்கலைக்கழகங்களுக்கு இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
முன்னதாக சீன சுற்றுப்பயணத்தை முன்னிட்டு டெல்லியில் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரணாப், ‘‘எல்லைப் பிரச்சினையில் நியாயமான, பரஸ்பரம் ஏற்றுக்கொள்கிற முடிவு எட்டப்பட வேண்டும் என இந்தியா விரும்புகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதன் மூலம் எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட முடியும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் சீனா வும் கைகோர்க்க வேண்டும்’’ என்றார்.
பிரணாப் முகர்ஜியுடன் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், நான்கு எம்பிக்கள் மற்றும் வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழுவும் சென்றுள்ளது.