

மத்தியப் பிரதேசத்தில் முஸ்லிம் என நினைத்து பல முறை கன்னத்தில் அறையப்பட்டு தாக்குதலுக்குள்ளான மனநிலை பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ள மானசாவை சேர்ந்தவர் 65 வயதான பன்வர்லால் ஜெயின். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை முஸ்லிம் என சந்தேகிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 'உன் பெயர் முஹம்மத் ஆ?.. ஆதார் கார்டு உள்ளதா?' எனக் கேட்டு அப்பாவி முதியவரை அறைகிறார். இந்த வீடியோவைத் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான முதியவர் பன்வர்லால் ஜெயின் உடல் மனசா காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோ வைரலானதையடுத்து, இறந்த முதியவரின் குடும்பத்தினர் மானசா காவல்நிலையம் முன்பு திரண்டு, குற்றவாளியை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து மானசா காவல்துறையினர் ஐபிசி பிரிவு 302/304 கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முதியவரை தாக்கி கொலை செய்தது, அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவரின் கணவரான தினேஷ் குஷ்வா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யபட்டுள்ள தினேஷ் குஷ்வா பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) மற்றும் பாஜகவின் உள்ளூர் பிரிவுகளின் முன்னாள் அலுவலகப் பொறுப்பாளராக இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து, காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான திக்விஜய சிங், "இந்த விவகாரத்தில் பாஜகவின் தினேஷ் குஷ்வா மீது ஐபிசி பிரிவு 302-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை நான் அறிந்தேன். அவர் கைது செய்யப்படுவாரா? இல்லையா என்பதைப் பார்ப்போம்" என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத், ''மத்தியப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது? சியோனியில் ஆதிவாசிகள் அடித்துக் கொல்லப்பட்டனர்,. குணா, மோவ், மாண்ட்லாவைத் தொடர்ந்து தற்போது, மானசா, நீமுச்சில் பன்வர்லால் ஜெயின் என்ற முதியவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார். சியோனியைப் போலவே இந்த சம்பவத்திலும் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜகவைச் சேர்ந்தவர். சட்டம்-ஒழுங்கு எங்கே, இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே மக்கள் கொல்லப்படுவார்கள்?'' என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.