

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிப்பதற்காக காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான விவகாரத்தில், உத்தாரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் வரும் 24-ம்தேதி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோது இவ்வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற ராவத் அரசு வழக்கைத் திரும்பப் பெறுவதாக சிபிஐயிடம் தெரிவித்தது. ஆனால், இக்கோரிக்கையை ஏற்க சிபிஐ மறுத்து விட்டது.
வழக்கை திரும்பப் பெறுவதற்கான முகாந்திரம் இல்லை எனக் கூறி அதனை நிராகரித்து விட்ட சிபிஐ, வரும் 24-ம் தேதி முதல்வர் ஹரீஷ் ராவத் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
உத்தராகண்ட் உயர் நீதிமன்றமும் சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்ற ராவத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
முன்னதாக, கடந்த 9-ம் தேதியே ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக அவகாசம் கோரியிருந்தார் ராவத்.