உத்தராகண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவு: சர்ச்சை முடிவுக்கு வருவதாக ராவத் மகிழ்ச்சி

உத்தராகண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவு: சர்ச்சை முடிவுக்கு வருவதாக ராவத் மகிழ்ச்சி
Updated on
1 min read

உச்ச நீதிமன்றம் நாளை முடிவை அறிவிக்கிறது

உத்தராகண்ட் சட்டப்பேரவையில் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடந்தது முடிந்தது.

சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் முன்னிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்காக காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஹரீஷ் ராவத் வெற்றி?

இந்த வாக்கெடுப்பில் ஹரீஷ் ராவத் வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்களுக்கு 34 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும் கூறி வருகின்றனர். பிடிஎஃப் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்களும் ஹரீஷ் ராவத்தை தாங்கள் ஆதரித்ததாக கூறுகின்றனர்.

பாஜக எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி கூறும்போது, "வாக்கெடுப்பில் பாஜகவை 28 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரித்தனர். அதனால் எங்களால் இந்த எண் விளையாட்டில் வெற்றி காண முடியவில்லை" என்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராவத், "உத்தராகண்ட் மாநில சர்ச்சை நாளை முதல் காணாமல் போய்விடும்" என்றார்.

நாளை முடிவு:

ஆனால், வாக்கெடுப்பு முடிவு சீலிடப்பட்ட உறையில் வைக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது. வாக்கெடுப்பின் முடிவை உச்ச நீதிமன்றமே நாளை (புதன்கிழமை) அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது.

பின்னணி:

உத்தராகண்ட் மாநிலத்தில், ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, அரசுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்த நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து, ஹரீஷ் ராவத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், மே 10-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 எம்எல்ஏக்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படாவிட்டால் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

எனவே, தங்களைத் தகுதி நீக்கம் செய்த பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு எதிராக, 9 எம்எல்ஏக்கள் உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

அவர்களின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி யு.சி. தியானி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். விரும்பினால், பேரவைத் தலைவர் கோவிந்த் சிங் குஞ்ச்வாலை அணுகி நிவாரணம் பெற அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in