Published : 22 May 2022 04:20 AM
Last Updated : 22 May 2022 04:20 AM
குவாஹாட்டி: அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, பிஹாரில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் மட்டும் 8 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முந்தைய மழையால் வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
இதன்படி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், திரிபுரா, நாகாலாந்து ஆகிய 7 வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. பிஹார், மேற்குவங்கம் உள்ளிட்ட கிழக்கு இந்திய மாநிலங்களிலும் பலத்த மழை பெய்கிறது.
அசாமில் 8 லட்சம் பேர் பாதிப்பு
அசாமின் 35 மாவட்டங்களில் கனமழையால் 32 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையான 3 கோடி பேரில் 7.2 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 234 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
அசாம் வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘மே 21 முதல் 24-ம் தேதி வரை அசாமில் கனமழை பெய்யும். குறிப்பாக மே 23-ம் தேதி அதி கனமழை பெய்யும்’’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் நதியின் கரை உடைப்பு ஏற்பட்டு ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் அசாமின் நிலைமை மேலும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது.
அருணாச்சல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவால் 8 பேரும், மேகாலயாவில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவால் வடகிழக்கின் பல்வேறு பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின் விநியோகம் தடைபட்டுள்ளது.
பிஹாரில் 33 பேர் உயிரிழப்பு
பிஹார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் கனமழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மின்னல் பாய்ந்து உயிரிழந்துள்ளனர்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மழை பெய்யும்போது பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம். மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பிஹாரில் மின்னல் பாய்ந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசின் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
பிஹார் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்த 2 நாட்களுக்கு பிஹாரின் மேற்கு சாம்பிரான், கிழக்கு சாம்பிரான், கோபால்கஞ்ச், தர்பங்கா, முஷாபர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் 25 பேர், பிஹாரில் 33 பேர் என இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமித் ஷாவை சந்திக்க திட்டம்
அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வா சர்மாவும், மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மாவும் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
அப்போது இரு முதல்வர்களும் மத்திய அரசிடம் இருந்து மழை வெள்ள பாதிப்பு நிவாரண நிதி பெறுவது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர்.
இதுகுறித்து மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா கூறும்போது, ‘‘மழை வெள்ள பாதிப்பு குறித்து அசாம் முதல்வருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினேன். இருவரும் இணைந்து டெல்லியில் அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
வெள்ள பாதிப்பு தொடர்பாக அசாம் முதல்வருடன் அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அசாமுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்தார். அவர் நேற்று அருணாச்சல பிரதேசத்தில் முகாமிட்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். அப்போது அந்த மாநில அரசு தரப்பில் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT