

டெல்லியில் டீசல் கார்களுக்கு தடை விதித்தால், அது பிபிஓ தொழில்களைப் பாதிக்கும். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் டீசலில் இயங்கும் வாடகைக் கார்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையில் நீதிபதி ஆற் பானுமதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி, மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்தார். “பிபிஓ நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அழைத்து வரவும், வீட்டுக்கு அனுப்பி வைக்கவும் டீசல் கார்களை பயன்படுத்தி வருகின்றன. டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டால், அது பிபிஓ நிறுவனங்களைப்பாதிக்கும். அவை வெளியேறலாம். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படும். இதுதொடர்பாக மத்திய அரசு விரைவில் மனு தாக்கல் செய்யும்” என்றார்.
அதற்கு நீதிபதிகள், “பிபிஓ நிறுவனங்கள் ஏன் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தக்கூடாது” என்றனர்.
இப்பிரச்சினை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சுற்றுச்சூழல் அமைப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.