Last Updated : 14 May, 2016 10:56 AM

 

Published : 14 May 2016 10:56 AM
Last Updated : 14 May 2016 10:56 AM

வறட்சி பாதித்த பகுதிகளில் விவசாயிகளுக்கு நிலுவை தொகை, நஷ்டஈடு வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

''வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள எல்லா தொகையையும் உடனடியாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு, விவசாயி களுக்கு நஷ்டஈடு வழங்க வேண் டும்’’ என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னார்வலர் ஸ்வராஜ் அபியான் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிஷா, ஜார்க்கண்ட், பிஹார், ஹரியாணா, சத்தீஸ்கர் ஆகிய 12 மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் வறட்சி நிவாரண தொகையை வழங்குவதில் அலட்சியமாக உள்ளனர்.

எனவே, வறட்சி பகுதியாக அறிவிப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும். மேலும், பயிர் கடன்களை சரியான நேரத்தில் பட்டுவாடா செய்யவும், விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவும், நிவாரண தொகை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு ஸ்வராஜ் அபியான் தனது மனுவில் கூறியிருந்தார்.

அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோக்குர் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் விசாரித்து வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

நிலுவையில் உள்ள தொகை மற்றும் தேவையான தொகையை உடனடியாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். வறட்சி பாதித்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்த விவசாயிகளுக்கு கால தாமதமாக ஊதியம் வழங்குவதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். நிதி இல்லை என்று மத்திய அரசு ஓடி ஒளிந்து கொள்ள முடியாது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை சரியான முறையில் அமல்படுத்த மாநில அரசுகள் ஆணையர்களை நியமிக்க வேண்டும். குறிப்பாக வறட்சி பகுதிகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை பலப்படுத்த வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இயற்றப் பட்ட சட்டத்தை பின்பற்ற மாட்டோம் என்று மாநில அரசுகள் சொல்ல முடியாது. சட்டம் என்பது மாநில அரசுகளுக்கும் சேர்த்துதான். கோடை விடுமுறை காலத்திலும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த பிரச்சினைகளில் மத்திய அரசும் மாநில அரசுகளும் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த நீதிமன்றம் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும். எனவே, யாரும் ‘லட்சுமணன் கோட்டை’ தாண்டாமல் இருப்பது நல்லது.

நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினர் வறட்சி யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையை சமாளிக்க தேசிய பேரழிவு நிவாரண நிதியத்தை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும். அதேபோல் 6 மாதங் களுக்குள் தேசிய பேரழிவு தடுப்பு படையை உருவாக்க வேண்டும்.

இதுகுறித்து, பிஹார், குஜராத், ஹரியாணா ஆகிய மாநில தலைமை செயலர்களுடன் மத்திய வேளாண் துறை அமைச்சக செயலர் ஒரு வாரத்துக்குள் ஆலோசனை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைக் கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x