

வரும் 2019-ம் ஆண்டுக்குள் முழு சுகாதார இலக்கை அடைவதன் ஒரு பகுதியாக, ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்க உரிய திட்டங்களை வகுக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், “அனைத்து நகர உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளை, ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து, ஒரு செயல்திட்டம் வகுக்க வேண்டும். இதனால், ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் மலம் கழிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன், ஒட்டு மொத்த நகரமும் திறந்தவெளியில் மலம் கழித்தலில் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுப்பது தொடர்பாக உயர்நிலை அளவில் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இதுசார்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன” என மத்திய அமைச்சரவைச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.