

மேற்குவங்கத்தில் சாரதா சிட்பண்ட் ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழல் தொடர்பாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் மம்தா மீது கூட புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
இதேபோல நாரதா எனும் புலனாய்வு செய்தி இணையதளம் அண்மையில் நடத்திய ‘ஸ்டிங் ஆபரேஷனில்’ ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் உட்பட 11 மூத்த தலைவர்கள் சிக்கினர். அவர்கள் லஞ்சப் பணத்தை பெறுவதை போன்ற வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்கள், சாரதா சிட்பண்ட் ஊழல், நாரதா ஸ்டிங் ஆபரேஷன் விவகாரங்களை எழுப்பினர்.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்து 27 பேர் உயிரிழந்தனர். 80 பேர் படுகாயம் அடைந்தனர். தகுதியற்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்தது, தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தியது ஆகியவையே மேம்பால விபத்துக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டின.
ஆனால் இந்த ஊழல் விவகாரங்கள் எதிர்க்கட்சிகளுக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அந்த மாநில மக்களைப் பொறுத்தவரை திரிணமூல் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வாக்களித்துள்ளனர் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
மே 27-ல் மம்தா அரசு பதவியேற்பு
மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான தலைவர் மம்தா பானர்ஜி (61) நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அப்போது மே 20-ம் தேதி பதவியேற்றோம். அந்த நாள் மாற்றத்தின் திருநாள். இந்த முறை வரும் 27-ம் தேதி எனது தலைமையிலான அரசு பதவியேற்கும். மே 29-க்கு முன்னதாக சட்டப்பேரவை கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.