Published : 21 May 2022 02:26 PM
Last Updated : 21 May 2022 02:26 PM
புதுடெல்லி: பாஜக ஆளும் உத்தரப்பிரதேச அரசு, புதிய மதரஸாக்களுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்தி விட்டது. இதை அம்மாநிலத்தின் மவுலானாக்களும், முஸ்லிம் அமைப்புகளும் கண்டித்து விமர்சனம் செய்துள்ளன.
நாட்டிலேயே அதிகமான எண்ணிக்கையில் மதரஸாக்கள் உ.பி.யில் தான் உள்ளன. இதில் அரசு அங்கீகாரம் பெற்ற மதரஸாக்கள் 14,461 உள்ளன.
இவற்றில் உ.பி.யின் அரசின் நிதியை 558 மதரஸாக்கள் பெறுகின்றன. சமீபத்தில் முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் சிறுபான்மை துறையின் புதிய அமைச்சராக தானிஷ் அப்சல் அன்சாரி அமர்த்தப்பட்டார்.
இவர் தனது அறிக்கையில் ஏற்கெனவே அரசு நிதி பெறும் மதரஸாக்களுக்கு இந்த உதவி தொடரும். புதிய மதரஸாக்களுக்கு இந்த நிதி அளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்தார்.
உ.பி.யின் முஸ்லிம்களில் சுமார் 25 சதவிகிதம் பேர் மதரஸாக்களில் பயில்கின்றனர். எனவே, உ.பி. அரசின் முடிவிற்கு அதன் மவுலானாக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உ.பி.யின் ஜமாய்த் உல் முஸ்லிமின் அமைப்பின் மவுலானா காரி இஷாக் கோரா கூறும்போது, ‘இந்த நிதி உதவி நிறுத்தம் ஏன்? என உ.பி. அரசு விளக்க வேண்டும். இவர்களிடம் உ.பி. மதரஸாக்களுக்கு அளிக்க மட்டும் நிதி இல்லையா?’ எனக் கேள்வி எழுப்பினார்.
உலகப் புகழ்பெற்ற தியோபந்திலுள்ள தாரூல் உலூம் மதரஸா உ.பி.யில் உள்ளது. இதன் தாக்கமாக மேலும் பல புகழ்பெற்ற மதரஸாக்களும் தியோபந்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் ஒரு மதரஸாவின் மவுலானாவான அசத் காஸ்மி கூறும்போது, ‘முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உ.பி. அரசு, மதரஸா உள்ளிட்டப் பல புதியக் கல்வி நிறுவனங்களைத் துவக்க வேண்டும். இதைச் செய்யாமல், நிதி உதவியையும் நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
எங்களுக்குப் பொதுமக்களிடம் இருந்து நிதி கிடைப்பதால் அரசு உதவி தேவையில்லை. இருப்பினும் நிதி உதவி நிறுத்தம் என்பது அவர்களது எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT