Last Updated : 21 May, 2022 11:42 AM

 

Published : 21 May 2022 11:42 AM
Last Updated : 21 May 2022 11:42 AM

பொதுக் கழிவறையில் 'அவுரங்கசீப் தலைமையகம்' போஸ்டர்: டெல்லி பாஜக தலைவரால் சர்ச்சை

புதுடெல்லி: டெல்லியின் பொதுக் கழிவறையில், 'அவுரங்கசீப் தலைமையகம்' எனப் பெயரிட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதை அங்குள்ள பாஜக தலைவர் ஒட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தலைநகரான டெல்லியின் உத்தம்நகரில் ஒரு பொதுக் கழிவறை உள்ளது. இதன் மீது டெல்லி பாஜகவின் தலைவர்களில் ஒருவரான அச்சல் சர்மா என்பவர் ஒரு சர்ச்சைக்குரிய சுவரொட்டியை ஒட்டியுள்ளார்.

இதன் படத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, "தம் பகுதியிலுள்ள கழிவறைகளுக்கு, ‘அவுரங்கசீப் தலைமையகம்’ எனப் பெயரிட வேண்டும் என இந்துக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனெனில், அவர் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயிலின் போலேநாத்தை என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற செயல்களில் தற்போது இந்துக்கள் பதிலளிக்கத் தயராக உள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்து கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாகப் புகார்கள் உள்ளன. கோயிலின் சிங்கார கவுரி அம்மன் தரிசனம் செய்யும் வழக்கில், மசூதியினுள் கள ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் கிடைத்தகாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இதனால் அப்பகுதியை பாதுகாக்கவும் வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து, சிங்கார கவுரி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தொடரவும் உத்தரவிட்டுள்ளது.

இச்சூழலில், டெல்லி பாஜகவின் அச்சல் சர்மா சார்பில் அவுரங்கசீப் சுவரொட்டி ஒட்டப்ப்பட்டுள்ளது. இதன் மீது எவரும் இதுவரை புகார் தர முன்வரவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x