Published : 21 May 2022 07:47 AM
Last Updated : 21 May 2022 07:47 AM
பாட்னா: பிஹாரைச் சேர்ந்தவர் நதூனி கான். 1900-ம் ஆண்டுகளில், போஜ்பூர் மாவட்டத்தின் கோயில் வர் நகர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இவருக்கு 9 ஏக்கர் எஸ்டேட் இருந்துள்ளது. இவரிடமிருந்து தர்பாரி சிங் என்பவர், 3 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அதன்பின் நதூனி கான் கடந்த 1911-ம் ஆண்டில் இறந்துவிட்டார்.
சொத்துரிமை தொடர்பாக நதூனி கான் வாரிசுதாரர்கள் இடையே தகராறு ஏற்பட்டதால், 9 ஏக்கர் எஸ்டேட்டிலிருந்து தான் வாங்கிய நிலத்தை மீட்க தர்பாரி சிங் கடந்த 1914-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதன்பின் வழக்கில் சிக்கியிருந்த இந்த 9 ஏக்கர் எஸ்டேட், ஆங்கிலேயே காலனி அரசால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், நதூனி கான் குடும்பத்தினர் அனைவரும் பாகிஸ்தான் சென்று குடியேறிவிட்டனர். வாங்கிய நிலத்தை மீட்க தர்பாரி சிங், அவரது மகன், பேரன், கொள்ளுப்பேரன் அதுல் சிங் என 4 தலைமுறைகளாக நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடியுள்ளனர்.
3 தலைமுறை வழக்கறிஞர்கள்
இந்த வழக்கில் முதலில் சிவ்ராத் நாரயண் சிங் என்ற வக்கீல் ஆஜராகியுள்ளார். அதன்பின் அவரது மகன் பத்ரி நாராயண்சிங், பேரன் சதேந்திர சிங் ஆகியோர் 3 தலைமுறை வக்கீல்களாக இந்த வழக்கை நடத்தி வந்துள்ளனர் என்பது மற்றொரு சுவாரஸ்யம்.
கடந்த 108 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை எப்படியாவது முடித்து வைக்க கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஸ்வேதா சிங் முடிவு செய்தார். இந்த வழக்கின் ஆவணங்கள் எல்லாம் பாழாகி விட்டன. இதனால் மிகவும் சிரமப்பட்டு ஆவணங்களை ஆராய்ந்து இந்த வழக்கில் கடந்த மார்ச் 11-ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்வேதா சிங், தர்பாரி சிங் வாங்கியதாக கூறப்படும் 3 ஏக்கர் நிலத்தை, அவரது கொள்ளுப் பேரன் அதுல்சிங், சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்தார்.
நீதிபதிக்கு குவியும் பாராட்டு
108 ஆண்டுகளுக்குப்பின் முடித்து வைக்கப்பட்ட இந்த சிவில் வழக்கு சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவிவருகிறது. இந்த வழக்கை முடித்துவைத்த நீதிபதி ஸ்வேதா சிங்குக்கு பாராட்டுகள் குவிகின்றன. சிலர் நீதிமன்ற செயல்பாட்டை விமர்சனமும் செய்கின்றனர். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், புகழ்பெற்ற சிவில் உரிமைகள் ஆர்வலருமான பிரகாஷ் சிங் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இது குறித்து விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT