

புதுடெல்லி: லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை வழங்க நிலத்தை லஞ்சமாக பெற்றது தொடர்பாக அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாக பெற்றுள்ளதாக சிபிஐ புதிய வழக்குபதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உட்பட 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
டெல்லி மற்றும் பிஹார் மாநிலம் பாட்னா, கோபால்கஞ்ச் ஆகிய இடங்களில் உள்ள லாலு மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
உரிமம் வழங்குவதற்கு லஞ்சம்
லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே ஓட்டல்களை பராமரிப்பதற்கான உரிமம், பாட்னாவை சேர்ந்த சுஜாதா ஓட்டல்ஸ் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக, பாட்னாவில் 3 ஏக்கர் நிலத்தை லாலு குடும்பத்தினர் லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு உரிமம் வழங்கியதாக கடந்த 2017-ம் ஆண்டில் சிபிஐ ஏற்கெனவே குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ரயில்வேயில் வேலை வாய்ப்பு அளிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டதாக லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ தற்போது புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
ஏற்கெனவே, பிஹார் மாநில முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதாக போலியான ஆவணங்கள் மூலம் அரசு கருவூலத்தில் இருந்து ரூ.950 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக லாலு பிரசாத் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இதில் 5 வழக்குகளில் லாலுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தற்போது ஜாமீனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.