Published : 21 May 2022 06:22 AM
Last Updated : 21 May 2022 06:22 AM

ஹைதராபாத்தில் நடந்தது போலி என்கவுன்ட்டர் - உச்ச நீதிமன்றத்தில் சிர்புர்கர் கமிஷன் அறிக்கை

புதுடெல்லி: ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி (28), கடந்த 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 27ம் தேதி இரவு 4 பேர் கொண்ட கும்பலால் ஒரு லாரியில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

பின்னர், அந்த கும்பல், பிரியங்கா ரெட்டியை ஒரு மேம்பாலத்தின் கீழே பெட்ரோல் ஊற்றி கொடூரமாக உயிரோடு எரித்துக் கொன்றது. இதனை தொடர்ந்து 4 பேரையும் ஹைதராபாத் போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

இவர்களை விசாரணைக்காக கடந்த 2019 டிசம்பர் 6-ம் தேதி அழைத்து சென்றபோது, போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், இது போலி என்கவுன்ட்டர் என ஹைதராபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டதால், 3 பேர் கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழுவினர் ஹைதராபாத் சென்று, செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் 4 உடல்களுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி மறு பிரேத பரிசோதனை நடத்தி ஆதாரங்களை சேகரித்தனர்.

ஹைதராபாத் வந்த கமிஷன்

இந்நிலையில், உச்ச நீதிமன்ற விசாரணை கமிஷன், ஹைதராபாத் வந்து, உயர் நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்கியது. தெலங்கானா அரசு அமைத்த ‘சிட்’ கமிஷன் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்ற கமிஷன் துல்லியமாக விசாரித்தது. இதில், 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆராய்ந்தது. மேலும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளையும் விசாரித்தது.

இந்நிலையில், இது போலி என்கவுன்ட்டர் என்றும், இதில் கொலை செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், சரிவர விசாரணை ஏதும் நடத்தப்படாமலேயே 4 பேரையும் போலீஸார் சுட்டுக் கொலை செய்துவிட்டு, இது என்கவுன்ட்டர் என நாடகம் நடத்தினர் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக சிர்புர்கர் கமிஷன் நேரில் சென்று விசாரணை நடத்திய ஆய்வறிக்கை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், போலீஸார் வேண்டுமென்றே திட்டம் போட்டு கொலை செய்தனர் என்றும், இந்த போலி என்கவுன்ட்டரில் 10 போலீஸார் இடம் பெற்றனர் என்றும், இது போல் நடந்தால் மக்களுக்கு நீதிமன்றம், சட்டம் ஆகியவை மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும் எனவும், சட்டத்தை யாரும் கையில் எடுக்க உரிமை இல்லை எனவும் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற உச்சநீதி மன்றம், இவ்வழக்கையும், இந்த அறிக்கையையும் தெலங்கானா உயர் நீதி மன்றத்திற்கே அனுப்பி வைக்கிறோம். அவர்கள் இதனை வைத்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கட்டும் என கூறியது. ஆதலால், இந்த என்கவுன்ட்டரில் பங்கேற்ற 10 போலீஸாரும் விரைவில் கைது ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x