

உத்தரப் பிரதேச மாநிலம், காஸியா பாத்தில் ராஜ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில், ‘இந்தியாமார்ட்’ மற்றும் 2 நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று காலை 10.30 மணிக்கு கட்டிடத்தின் தரை தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து, முதல் தளத்துக்கு பரவியது.
இதனால் அங்கிருந்த அதிகாரிகள் அலறியடித்து வெளியேற முயன்றனர். படிக்கட்டு வழியாக வெளியேற முடியாத 2 பேர், ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியே குதித்தனர். அந்த இருவரில், பியுஷ் கோயல் என்ற அதிகாரி தலைகுப்புற தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் சிலர் அலுவலகத்தின் உள்ளேயே மயங்கி விழுந்தனர். தகவல் அறிந்து, 5 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த வீரர்கள், தீயை கட்டுப்படுத்தி, கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் சந்திர பிரகாஷ் தியாகி மற்றும் புனித் மிஷ்ரா ஆகிய 2 பேர், மருத்துவமனைக்கு செல்லும் முன்பாகவே இறந்திருந்தனர். அதே போல், எம்எம்ஜி மாவட்ட மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரிதிக் மற்றும் ஹேமந்த் ஆகி யோர் வழியிலேயே இறந்து விட்டனர்.