Published : 20 May 2022 03:12 PM
Last Updated : 20 May 2022 03:12 PM

மொழியை வைத்து சர்ச்சைகளை கிளப்ப முயற்சி நடக்கிறது: பிரதமர் மோடி ஆதங்கம்

ஜெய்ப்பூர்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் நமது அடையாளம் தான், கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம் என பிரதமர் மோடி கூறினார்.

ராஜஸ்தானில் நடக்கும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மோடி பேசியதாவது:
பாஜக முன்பு ஜனசங்கம் இருந்த போது நம்மை பற்றி நாட்டில் பலருக்கு தெரியாது. தேசத்தை கட்டமைக்கும் கொள்கையை நமது தொண்டர்கள் ஏற்று கொண்டனர். அதிகாரத்தில் இருந்து நாம் நீண்ட தொலைவில் இருந்தாலும், நமது தொண்டர்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருந்தனர். ஆனால் இன்று மக்கள் நம்மை ஏற்கின்றனர், அங்கீகரிக்கின்றனர்.

பாஜக அரசு இந்த மாதத்துடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்தனை வருடங்கள் தேசத்திற்கு சேவை செய்வதாகவும், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக உழைத்து சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், பெண்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதாகவும் இந்த அரசு அமைந்து வருகிறது. உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. நம் நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.

முக்கியமான பிரச்னைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்பும் செயல்களில் சில கட்சிகள் ஈடுபட்டுள்ளன. சுற்றுச்சூழலை இந்த கட்சிகள்ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையை நாம் பார்க்கிறோம்.

ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். இவர்களிடம் பாஜக தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும். பாஜக ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறது. வற்றை மதித்து வணங்குகிறது. தேசிய கல்விக்கொள்கையில் ஒவ்வொரு மாநில மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

சுதந்திரம் அடைந்த பிறகு, குடும்ப கட்சிகள் ஊழல், மோசடி என நாட்டின் மதிப்பு மிக்க நேரத்தை வீணடித்துள்ளன. குடும்ப அரசியலால் வஞ்சிக்கப்பட்ட இளைஞர்களின் நம்பிக்கையை பாஜகவால் மட்டுமே மீட்டெடுக்க முடியும். நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கான இணைப்பாக பாஜக கருதுகிறது. இனி மக்களின் எதிர்காலம் பாஜக தான். இந்தியாவின் வளமான எதிர்காலக் குறியீட்டை எழுதத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞரையும் பாஜகவில் இணைக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x