Published : 20 May 2022 01:31 PM
Last Updated : 20 May 2022 01:31 PM

'குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்' - பிரசாந்த் கிஷோர் கணிப்பு

குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் பற்றி கருத்து சொல்லுமாறு என்னை அடிக்கடி கேட்டு வருகின்றனர். என்னைப் பொருத்தவரை, அந்தக் கூட்டம் அர்த்தமுள்ளதாக எந்த முடிவையும் எட்டவில்லை. தன் இருப்பை உறுதி செய்துள்ளதோடு, காங்கிரஸ் தலைமையில் காலத்தை நீட்டித்துள்ளதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. குஜராத், இமாச்சலப்பிரதேச படுதோல்வி வரையே இவையும்" என்று பதிவிட்டுள்ளார்.

— Prashant Kishor (@PrashantKishor) May 20, 2022

3 நாள் சிந்தனை கூட்டம்: சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது, இதையடுத்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சில மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டுள்ளது. அதன் ஒருகட்டமாக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் 3 நாள் சிந்தனை கூட்டத்தை கடந்த 13-ம் தேதி காங்கிரஸ் கூட்டியது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா உட்பட சுமார் 400 தலைவர்கள் கலந்துகொண்டனர். அடுத்தகட்ட தேர்தல் வியூகங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

மக்களுடன் தொடர்பு: இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு முறிந்த நிலையில் உள்ளது. இந்த உண்மை நிலவரத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாஜக மக்களுடன் நல்ல தொடர்பில் உள்ளது. அவர்களிடம் அதிக பணம் உள்ளது, நாம் மக்களுடனான தொடர்பை சீர்படுத்த வேண்டும். இந்த தொடர்பை மீண்டும் ஏற்படுத்தி கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, அக்டோபர் மாதம் முதல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை மேற்கொள்ளும். மக்களும் மீண்டும் இணைப்பை ஏற்படுத்த நாம் கடினமாக உழைக்க வேண்டும். நாட்டை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முன்னேற்ற முடியும் என்பது மக்களுக்கு தெரியும்" என்று கூறியிருந்தார்.

ஹர்திக் விலகல், பிரசாந்த் கணிப்பு.. அதற்கான முன்னெடுப்புகளை கட்சி எடுத்து வருகிறது. இந்நிலையில், குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். குஜராத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹர்திக் படேல் அண்மையில் விலகினார். அவரது விலகல் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் அக்கட்சியின் அடுத்தடுத்த தோல்விகளைப் பற்றி ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மீண்டும் காங்கிரஸ் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நிறைவேறவில்லை. இந்நிலையில் தான் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸின் தோல்வி முகத்தைக் கணித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x