Published : 20 May 2022 10:32 AM
Last Updated : 20 May 2022 10:32 AM

டிஜிட்டல் பொருளாதாரத்தை பேரழிவு என்றார்கள்; ஆனால் கதையே மாறிவிட்டது - பிரதமர் மோடிக்கு நடிகர் மாதவன் புகழாரம்

"டிஜிட்டல் பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியபோது பொருளாதார நிபுணர்கள் பலரும் இது மிகப் பெரிய பேரழிவாக அமையும் என்றனர். இரண்டு ஆண்டுகள் கடந்தபின்னர் கதையே மாறிவிட்டது. இந்தியா இன்று நுண் பொருளாதார தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. இதுதான் புதிய இந்தியா" என்று புகழ்ந்துள்ளார் நடிகர் ஆர்.மாதவன்.

பிரான்ஸில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கவுரவத்திற்குரிய நாடாக இந்தியா பங்கேற்றுள்ளது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இந்திய திரைப்பிரபலங்கள் ஏஆர் ரஹ்மான், நவாஸுதீன் சித்திக், மாதவன், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றுள்ளனர். இதேபோல் தமிழ் சினிமாவில் இருந்து இயக்குநர் பா.ரஞ்சித், தமன்னா, நயன்தாரா போன்றோரும் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றுள்ளனர்.

கேன்ஸ் விழாவில் ஆர்.மாதவன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ராக்கெட்ரி: தி நம்பி எஃபக்ட் திரைப்படம் நேற்று (மே 19) திரையிடப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து கேன்ஸ் விழாவில் பேசிய நடிகர் மாதவன் பிரதமர் மோடியைப் பாராட்டிப் பேசியுள்ளார். அந்த வீடியோவை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் மாதவன் பேசியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் நுண்பொருளாதார நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் கரன்ஸியை அறிமுகப்படுத்தினார். அப்போது பொருளாதார நிபுணர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஒரு விவசாயிக்கும், படிக்காத ஏழை, எளிய மக்களுக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றியும் ஆன்லைன் கணக்கு பற்றியும் எப்படி சொல்லித் தரப்போகிறீர்கள் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த முயற்சி இந்தியாவுக்கு பொருளாதாரத்தில் மிகப்பெரிய பேரழிவைத் தரப்போகிறது எனப் பேசப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்த கதையே மாறியது. இப்போது உலகிலேயே இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பயன்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது. இது ஏன் நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் இந்திய விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி கற்றுத்தர வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. இது தான் புதிய இந்தியா. இவ்வாறு மாதவன் பேசியுள்ளார்.

மாதவனின் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் இந்தியாவில் ஜூலை 1ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x