Published : 20 May 2022 10:00 AM
Last Updated : 20 May 2022 10:00 AM

பாங்காங் ஏரியில் புதிய பாலம் கட்டுகிறதா சீனா? - மத்திய அரசு விளக்கம்

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஸோ ஏரியில் சீனா புதிய பாலம் கட்டுவதாக செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியான நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் அது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. பாலம் கட்டப்படும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து பாதுகாப்பு துறை உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில், "சீனா தற்போது கட்டிவரும் பாலம் அது ஏற்கெனவே ஆக்கிரமித்துவைத்துள்ள பகுதியில் தான் அமைந்துள்ளது. இப்போது அவர்கள் பெரிய பாலத்தைக் கட்டுகின்றனர். அதன் வழியாக ராணுவ வாகனங்களையும், வீரர்களையும் ஏரியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு கொண்டு வர இயலும். இந்த பெரிய பாலத்தை கட்டுவதற்காகவே அவர்கள் முன்னர் சிறிய பாலத்தைக் கட்டினார்கள். அந்த சிறிய பாலம் நிரந்தரமானது அல்ல இந்த பிரதான பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தவுடன் அது அப்புறப்படுத்தப்படும். சிறிய பாலம் அக்டோபர் 2021ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. ஜனவரி 2022ல் அதன் கட்டுமானப் பணிகள் முடிந்தன. அந்த சிறிய பாலத்தின் கீழ் ரோந்துப் படகுகள் கூட பயணிக்க முடியாது. இந்தப் பாலத்துக்கான கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லவே அந்த சிறிய பாலம் அமைக்கப்பட்டது. அதனால் இப்போது சீனர்கள் கட்டுவதை இரண்டாவது பாலம் என்று அழைக்கமுடியாது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "ஊடகச் செய்திகளில் பாங்காங் ஏரியில் பாலம் கட்டப்படுவது பற்றி தகவல்கள் வந்துள்ளன. இது ராணுவம் சம்பந்தப்பட்டது. அதனால் அதைப்பற்றி நான் பேச முடியாது. ஆனால் பாலம் கட்டப்படும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்பதை இந்தியா எப்போதும் நம்புகிறது. நாங்கள் இத்தகைய நடவடிக்கைகள் கூர்ந்து கவனித்து வருகிறோம்" என்றார்.

மேலும், "லடாக் எல்லைப் பிரச்சினை குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இடம் எடுத்துரைத்துள்ளார்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x