Published : 20 May 2022 04:44 AM
Last Updated : 20 May 2022 04:44 AM

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சுனில் ஜாக்கர் பாஜகவில் இணைந்தார்

டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சுனில் ஜாக்கர் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியில் இணைந்தார். படம்: பிடிஐ

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய சுனில் ஜாக்கர் நேற்று பாஜகவில் இணைந்தார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கடந்த 2017 முதல் 2021 வரை பதவி வகித்தவர் சுனில் ஜாக்கர். 2012 முதல் 2017 வரையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். கடந்த ஆண்டு பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரிந்தர் சிங் விலகியபோது, இவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரண்ஜித் சிங் சன்னி முதல்வரானார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சுனில் ஜாக்கர் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

இந்நிலையில், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சுனில் ஜாக்கர் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியில் இணைந்தார்.

பின்னர் சுனில் ஜாக்கர் கூறும்போது, “கடந்த 150 ஆண்டுகளாக, 3 தலைமுறைகளாக எங்கள் குடும்பம் காங்கிரஸ் கட்சிக்கு சேவை செய்து வந்தது. நான் கடந்த 50 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்தேன். ஆனால் தேசியவாதம், ஒருமைப்பாடு மற்றும் சகோதரத்துவம் ஆகிய பிரச்சினைகளால் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளேன்” என்றார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறும்போது, “சுனில் ஜாக்கரை பாஜகவுக்கு வரவேற்கிறேன். அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டவர் அவர். தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். பஞ்சாபில் கட்சியை பலப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என நம்புகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x