Published : 19 May 2022 05:36 AM
Last Updated : 19 May 2022 05:36 AM
அகமதாபாத்: குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஹல்வாட் தொழில்துறை மண்டலத்தில் சாகர் உப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு சாக்கு மூட்டையில் உப்பு நிரப்பும் பணி நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதற்குள் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருப்பதாக மோர்பி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது “இந்த துக்க நேரத்தில் என் எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் இருக்கும் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உள்ளூர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். மோர்பியில் நடந்த சோகத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT