Published : 19 May 2022 06:39 AM
Last Updated : 19 May 2022 06:39 AM

வாரணாசியில் ரூ.240 கோடி மதிப்புள்ள நாட்டு கோட்டை சத்திரத்தின் நிலம் மீட்பு - 19 ஆண்டுகளாக சமாஜ்வாதி தலைவரிடம் சிக்கி இருந்தது

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழர்கள் மடமான நாட்டு கோட்டை சத்திரத்தின் ரூ.240 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது.

உ.பி.யின் பிரயாக்ராஜ், அயோத்தி மற்றும் காசி, பிஹாரின் புத்தகயா, மகாராஷ்டிராவின் நாசிக், மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா காளி கோயில் என பல இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த நகரத்தார் சமூகத்தினரின் சத்திரங்கள் உள்ளன. இவர்களது தலைமையிடம் காரைக்குடியில் அமைந்துள்ளது.

காசி எனும் வாரணாசியில் ‘ஸ்ரீகாசி நாட்டு கோட்டை நகரத்தார் சத்திரம்’, 1813-ல் அமைக்கப்பட்டுள்ளது. கோதவுலியா பகுதியிலுள்ள இதன் சார்பில் காசி விஸ்வநாதர் கோயிலின் பூசைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக, நகரத்தார் சத்திரத்தில் இருந்து பூசைக்கான பூ, பழம் உள்ளிட்டவற்றுடன் மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று பூசை முடித்து திரும்புவது உண்டு.

இந்நிலையில், வாரணாசியின் நகரத்தார் சத்திரத்திற்கு சொந்த மாக கங்கை கரையின் சிக்ரா பகுதியிலுள்ள நந்தவனத்தில் 62,000 சதுர அடியில் ரூ.240 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது.

இங்கு, விஸ்வநாதர் கோயிலுக்கான பூக்கள் பயிர் செய்யப்படுகிறது. அந்த பணிக்காக அமர்த்தப்பட்ட முன்னா எனும் ஆனந்த் மோஹன், அவரது சகோதரர் கிருஷ்ண மோஹன் ஆகியோர் சிக்ராவின் நிலத்தை ஆக்கிரமித்தனர்.

இதை மீட்க நகரத்தார் சத்திரம் சார்பில் பல ஆண்டுகளாக முயற்சி நடந்தது. உ.பி. தேர்தலுக்கு முன்பாக வாரணாசி காவல்துறை ஆணையர் சக்தி கணேஷ் மற்றும் அதிகாரிகளை சத்திரத்தார் சந்தித்தனர்.

பின்னர் அவரது தலையீட்டால், மோஹன் சகோதரர்கள் மீது வழக்கு பதிவாகி நகரத்தாரின் நிலம் காலி செய்யப்பட்டது. மேலும், தற்போது நகரத்தார் சத்திரக் கட்டிடத்தின் மேல்தளத்திலும் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதன் எதிர்புறம் நகரத்தாருக்கு சொந்தமாக சுமார் 4,000 சதுர அடி அளவிலுள்ள பசு மடமும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இவற்றையும் மீட்கும் பணி தொடர்கிறது.

இந்த விவகாரத்தில் வாரணாசி மக்களவை தொகுதி எம்.பி.யான பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களில் 2 தமிழர்கள் ஓய்வு பெற்ற டிஎஸ்பி முத்துக்குமார், மு.சோ.அழகப்பன் ஆகியோரும் முக்கியப் பங்காற்றி உள்ளனர். ஓராண்டுக்கு முன், வாரணாசியில் உதவி ஆட்சியராக இருந்த எம்.மணிகண்டன் எனும் தமிழரும் உதவியுள்ளார்.

இதற்காக, அதிகாரி மணிகண்டன் மீது மோஹன் சகோதரர்கள் வழக்கு பதிவு செய்ய புகாரளித்திருந்தனர். இந்த ஆனந்த மோஹன் சமாஜ்வாதி சார்பில் வாரணாசி தொகுதியின் வேட்பாளராகவும் போட்டியிட்டிருந்தார். நகரத்தார் நிலஆக்கிரமிப்பு புகாரும் அவரது தோல்விக்கு முக்கியக் காரணமாகிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x