Published : 18 May 2022 07:41 AM
Last Updated : 18 May 2022 07:41 AM

6ஜி தொலைத்தொடர்பு சேவை 2030-க்குள் அமல்: டிராய் வெள்ளி விழாவில் பிரதமர் மோடி தகவல்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) வெள்ளி விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்டமைப்பை தொடங்கி வைத்தார். படம்: பிடிஐ

புதுடெல்லி: வரும் 2030-க்குள் 6ஜி தொலைத்தொடர்பு சேவையை அமல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிராய் வெள்ளி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) வெள்ளி விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்ட பின்னர் பிரதமர் மோடி காணொலி மூலம் பேசியதாவது:

இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்ட மைப்பு இன்று (நேற்று) முதல் 5 இடங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. இது சுயாசார்பு கொள்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தொலைத்தொடர்பு துறையின் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட இந்த அமைப்பில் 5ஜி தொலைத்தொடர்பு சாதனங்களை பரிசோதனை செய்ய முடியும். இதை உருவாக்கிய ஐஐடி நிபுணர்களை உள்ளடக்கிய குழுவுக்கு வாழ்த்துகள். நாட்டில் உள்ள கிராமங்களுக்கும் 5ஜி தொழில்நுட்ப வசதிகள் கிடைக்க இது முக்கிய பங்கு வகிக்கும்.

அதேநேரம் இணைப்பு வசதியை நவீனப்படுத்த வேண்டியது அவசியம். மேலும் இது நாட்டின் நிர்வாக நடைமுறையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். வாழ்வியல் முறை எளிமையாவதுடன் தொழில் தொடங்குவதும் எளிமையாகும். வேளாண்மை, சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் இது ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும். 5ஜி சேவையை விரைவாக செயல்படுத்த, அரசு மற்றும் தொழில் துறையினரின் கூட்டு முயற்சி அவசியம்.

2ஜி காலகட்டத்தில் ஊழல், கொள்கை முடிவு எடுப்பதில் தாமதம் என பல்வேறு சிக்கல்களை தொலைத்தொடர்புத் துறை சந்தித்தது. எனினும், அதிலிருந்து மீண்டு, 3ஜி-யிலிருந்து 4ஜி தொழில்நுட்பத்துக்கு வேகமாக நாடு மாறியது. இப்போது 5ஜிக்கு முன்னேறி உள்ளது. 5ஜி சேவை அமலுக்கு வந்தால் இந்திய பொருளாதாரத்தில் கூடுதலாக 45,000 கோடி டாலர் புழங்கும்.

இதையடுத்து வரும் 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்துக்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அதிவேக இணையதள வசதியை வழங்கும். இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு தனது பணிகளை தொடங்கி விட்டது.

பாஜக அரசு பொறுப்பேற்ற கடந்த 8 ஆண்டுகளில் தொலைத்தொடர்புத் துறையில் புதிய ஆற்றல் புகுத்தப்பட்டுள்ளது. இதில் டிராய் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஏழைகளுக்கும் செல்போன் வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக உள்நாட்டிலேயே செல்போன் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்பட்டது. இதன்மூலம் செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் எண்ணிக்கை 2-லிருந்து 200-க்கு மேல் அதிகரித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2014-க்கு முன்பு 100 கிராமங்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைத்தது. இப்போது 1.75 லட்சம் கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x