Published : 18 May 2022 06:23 AM
Last Updated : 18 May 2022 06:23 AM

சீனர்களுக்கு விசா வாங்கி கொடுத்ததில் ரூ.50 லட்சம் லஞ்சம்: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ திடீர் வழக்குப்பதிவு முழுவிவரம்

டெல்லி ஜோர் பாக்கில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியபோது வெளியே கூடியிருந்த பத்திரிகையாளர்கள். படம்: பிடிஐ

புதுடெல்லி: கடந்த 2009-2014-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சீனாவைச் சேர்ந்த 263 பேருக்கு விசா வழங்கியதில் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடு உட்பட 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் முறைகேடாக கடந்த 2007-ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற்றது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த 2018-ம் ஆண்டும், ப.சிதம்பரம் 2019-ம் ஆண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளியில் வந்தனர். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 2009-2014-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ நேற்று புதிதாக வழக்கு பதிந்துள்ளது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 2009-2014 காலகட்டத்தில் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் மாநிலத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பஞ்சாபின் மான்சா நகரில் அமைக்கப்பட்ட இந்த 1,980 மெகாவாட் திறனுடைய மின்திட்டமானது, சீனாவைச் சேர்ந்த ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்டிரக்சன் கார்ப் (செப்கோ) என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. அப்போது மின் திட்டத்தைக் கட்டமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு சீன தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டுவர அந்த நிறுவனம் முயற்சித்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த உச்ச வரம்புக்கு மேல் விசாக்கள் தேவைப்பட்டன. எனவே, சம்பந்தப்பட்ட சீன நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தை அவரது நெருங்கிய கூட்டாளிகள் மூலம் அணுகியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அரசு விதிகளை மீறி சீன நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு 263 விசாக்கள் ஒதுக்கப்பட்டன. இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சமாகத் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையிலேயே சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 10 இடங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இதன்படி சென்னையில் 3 இடங்களிலும் மும்பையில் 2 இடங்களிலும் டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீடு, அலுவலகத்திலும் கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 10 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.

கார்த்தி சிதம்பரம் மீது புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது லண்டனில் இருப்பது தெரியவந்துள்ளது. லண்டனில் கார்த்தி சிதம்பரத்தின் மகள் படித்து வருகிறார். அவரைக் காண அவர் லண்டன் சென்றுள்ளார். அதேபோல் கட்சிப் பணி காரணமாக ப.சிதம்பரம் ராஜஸ்தான் சென்றுள்ளார். சோதனை நடைபெறும் போது இருவரும் சென்னையில் இல்லை. சிபிஐ அதிகாரிகளின் இந்த திடீர் சோதனை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சோதனை நடத்துவது குறித்து ட்விட்டரில் ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை, டெல்லியில் உள்ள எனது வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி உள்ளனர். காலை முதல் நடந்து வரும் சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிபிஐ தரப்பில் என்னிடம் காண்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) எனது பெயர் குற்றவாளி என்று குறிப்பிடப்படவில்லை. சிபிஐ சோதனை நடத்தி வரும் இந்த தருணம் சுவாரஸ்யமானது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதேபோல், கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள், எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்ட ட்விட்டரில், ‘ப.சிதம்பரம் ஒரு தேசியவாதி மற்றும் ஒரு தேசபக்தர். நாட்டுக்கான அவரது அர்ப்பணிப்பு சந்தேகத்துக்கு இடமில்லாதது. முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சருக்கு எதிராக சிபிஐ மூலம் ஆதார அடிப்படையிலான அபத்தமான குற்றச்சாட்டுகளை விதைப்பது, தேர்ந்த அரசியல்வாதிகளின் நடத்தையில் உள்ள வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது. சிதம்பரத்துத்துக்குத் துணையாக காங்கிரஸ் கட்சி எப்போதும் நிற்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

சிபிஐ விளக்கம்

இதுதொடர்பாக சிபிஐ தரப்பில் அளித்துள்ள விளக்கத்தில், “பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியில் சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வந்த மின் திட்டப் பணிகளில் வேலை செய்ய 263 சீனர்களுக்கு ஒரே மாதத்தில் விசா வழங்குவதற்காக சென்னையைச் சேர்ந்த நபருக்கு ரூ.50 லட்சம் லஞ்சமாக வழங்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை, மும்பை மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த புகார் தொடர்பான விசாரணை தொடர்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு முன் திரண்ட காங்கிரஸார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வீட்டில் இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் வழக்கறிஞரைத் தவிர வேறு யாரையும் சோதனையின்போது வீட்டுக்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதேபோல் நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மற்றும் 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துவதை அறிந்து செல்வப் பெருந்தகை எம்எல்ஏ உட்பட காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் சிதம்பரம் வீடு முன் திரண்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் நோக்கத்துடன் சோதனை நடப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x